05 March 2013

விழியில் வலி தந்தவனே-9


சங்க இலக்கியங்கள் எல்லாம் காதலில் உருகும் தலைவிக்கு. அன்னம் தூது போனதும், புறா தூதுபோனதும்,பணிப்பெண் தோழிகள் ,தூதுபோனதும் என்று ஏட்டுச்சுரக்காய் போல எல்லாம் வெற்றுக்கோஸம் தான் இந்தியா ஒளிர்கின்றது என்பது போல !

என்ன போய் என்ன ?இந்த காதல் தூது எல்லாம் பேஜார் போல ஒரு புறம் என்றால் !

மறுபுறம் என்ன சொல்லி இருப்பார்கள்


 தலைவனுக்கு  ?



 கொடியிடையாள் அறுகம்புல் போல வாடிப்போனால் என்றா ?தலைவன் முகம் காணாது நெஞ்சோடு புலம்புகின்றாள் .

இப்ப வரும் என்று இருந்த யாழ்தேவி தடம்புரண்டு மதவாச்சியில் வீழ்ந்துவிட்டது வவுனியா வராது என்றா?


இந்த இலக்கியம் எல்லாம் அகநானுறு என்று காதல் பாடினாலும் ;இந்த யுத்த பூமியில் காதல் படுத்தும்பாடு தோழிகளுக்கு எப்போதும் தொல்லை தான் போலும்!


 எல்லைதாண்டி வரும் பயங்கரவாதம் போல எப்ப குண்டு வெடிக்கும் என்று தெரியாது போல நினைத்து இருந்த ரகுவிற்கு !

சுகி ரகுவிடம் கொஞ்சம் கதைக்கவேண்டும் என்று சொன்னதாக அவளது தோழி சுவாதி வந்து சொன்னாள்.

13 வது திருத்தச்சட்டத்தை விட்டு வேற பேசமாட்டோம் என்று அடம் பிடிக்கும் இனவாத ஆட்சியாளர் போல அவள் என்ன கதைப்பாள் வழமையான அதே நீ பாதி நான் பாதி என் இதயத்திருடனே உன்னை நினைத்து என்று பழைய பல்லவிதான்.

பிடிக்கும் பிடிக்கும் என்று  எனவே ரகு அதை பெரிது படுத்தவில்லை.

ஆனால் நிலமை அவசரகாலச்சட்டம் போல கொஞ்சம் சீரியஸ் என்று அவளது வகுப்பை கடந்து போகும் போது ரகு உணர்ந்தான்.

சுகி இங்கேயும் ஒரு கங்கை போல அழுதுகொண்டு இருப்பதை கண்டான்.ஒரு நாள் கழிந்தது புதுமைப்பித்தனா ?கனகாம்பரம் கு.பா ராஜகோபாலான சிறந்த கதை ஆளுமை மிக்கவர்கள் ?என்று கடந்த காலத்திலேயே கல்வி புகட்டும் தமிழ் ஆசிரியர் !

இன்றைய தேவையான நிகழ்கால நிலை சொல்லும்  மரணங்கள் மலிந்த பூமி நாவல் பற்றியோ, அந்த அவர்களும் இந்த இவர்களும் நாவல் பற்றியோ பாடம் எடுக்காத தமிழ் ஆசிரியர் வராததால் .ஏனைய மாணவர்கள் நூலகத்துக்கு போய்விட்டனர் .


ஹாசினியின் அடுத்த புதுப்படம் என்ன ?சனத் ஜெயசூரிய  செஞ்சரி அடித்தாரா ?என்று  அறியும் வாரப்பத்திரிக்கை வராத நூலகத்திற்கு !

அங்கு இருபது எல்லாம் இனவாத வெறித்தனத்தின் வேட்டையை காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும், அழகாய் அச்சிட்டு அடுத்த தலைமுறைக்கும் நம் ஈழஅவலத்தைச் சொல்லும் நம் பொக்கிசம் !

.சுகியும் தோழி. சுவாதியும் மாத்திரமே வகுப்பில் இருந்தனர்.


ரகு அவர்கள் வகுப்பை கடந்து செல்வதை கண்டதும் .சுகியின் தோழி சுவாதி கூப்பிட்டாள்.

"ரகு அண்ணா ரகு அண்ணா கொஞ்சம் இங்க வாங்க."

அவள் கூப்பிடுவது ரகுவின் காதில் விழுந்தாலும் .

இனவாத ,மதவாத அரசியல் வேண்டாம் என்று சொன்னாலும் புரியாத கொள்கை வகுப்பாளர்கள் போலஅவன் அதை கவனிக்காதது போல சென்றான்.

ஓடிவந்து இடைமறித்தாள் சுகியின் தோழி சுவாதி

".என்ன ரகு அண்ணா சுகி அழுதுகிட்டு இருக்கா என்ன என்று கேட்கமாட்டிங்களா? அவள் உங்களுடன் கதைக்கனுமாம்."

!தூதுவந்தவள் மூச்சு வாங்கினால் ரவியின் முகம் பார்த்து .

என்ன சொல்வான் இந்த காளை என் தோழிக்கு பதிலாக என்பது போல.

சரி போய் என்ன என்று கேட்போம் பெரிய கவுண்டர் பொண்ணு விழியில் நுழைந்து இதய வலி என்கின்றது ஏழைஜாதியிடம் என்று நினைத்துக்கொண்டு சுகியை நோக்கி போனான்.

மேசையில் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் சுகி ரகுவை கண்டதும் பெற்றவர்கள் பிரிந்தால் கூடப்பிறந்த உறவு ஓடிவந்தால் கட்டிக்கொண்டு உணர்ச்சி வெள்ளத்தில் அழுது புலம்பும் பெண்களைப் போலஇன்னும் அவளது அழுகை அதிகரித்தது.

என்ன சுகி ஏன் அழுறீங்க? என்ன பிரச்சனை ரகு கேட்கவும்

அது ஏன் உங்களுக்கு நீங்க உங்கள் வேலையை பார்த்திட்டு போங்க நான் அழுதா என்ன? அழாட்டி உங்களுக்கு என்ன ரகு ?என்று சற்று கோபமாக சொன்னாள்.தேடி வந்தவனிடம் ஊடல் கொண்டவள் துரத்துவது சிலப்பதிகாரம் முதல் சுகி வரை பெண் புத்தி ஒன்றுதான் போல எண்ணிக்கொண்டான்!

சரி அப்ப நான் போறேன் என்று ரகு வெளிக்கிட

இல்லை நில்லுங்க ரகு  சொல்லுறன்.

எங்க வகுப்பில் படிக்கும் அரவிந்தன் என்னை விரும்புவதாக சொல்கின்றான் இரண்டு நாளைக்குள் நல்ல முடிவா சொல்லட்டாம் .நான் என்ன செய்ய ரகு ஓரே தொல்லையாக இருக்கு அவனால்!

(அரவிந்தன் பின்னாலில் மண்ணுக்காக மரணித்தவர்களில் கலந்துவிட்டான்)

ரகுவிற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான் .இங்க பாருங்க சுகி இதுக்கு ஏன் அழுறீங்க.

 இப்ப புரியுதா லவ்டுடே போல ஒருத்தன் விரும்புவதாக சொல்வது உங்களுக்கு தொல்லையாக இருக்கு இல்ல. அதுமாதிரித்தானே நீங்களும் என்னை தொல்லை பண்ணுறீங்க.ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்குப் பிடிக்கும் என்று

ரகு அப்படி சொல்வான் என்று சுகி சற்றும் எதிர்பார்கவில்லை சர்வதேச தயவில் வந்த சமாதனம் கூட இனவாதிகளினால் கிழிக்கப்பட்ட தமிழர் நிலை போல அவள் அழுகை மேலும் அதிகரித்தது.


ஏன் ரகு  நான் உங்களை தொல்லை பண்றேனா ?பரவாயில்லை இனி நான் உங்களை தொல்லை பண்ணமாட்டன். என்னை மன்னிச்சிருங்க.என்று ரகுவின் முகத்தை பார்க்க சக்தி இல்லாதவளாக வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
எதுவும் பேசாமல் ரகு அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டான்

அடுத்த இரண்டு நாட்களுக்கு சுகி ரகுவை கண்டாலும் காணாதது போல சென்றுவிடுவாள்.இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்ன தந்தை செல்வா போல அவளை நினைக்க ரகுவிற்கு கஸ்டமாகத்தான் இருந்தது.
ஆனால் மணமேடையில் அவளை இருத்தி அழகு பார்க அவன் தயாராக இல்லை.

இரண்டு மூன்று நாட்கள் சுகி பாடசாலைக்கும் வரவில்லை. ரகுவுக்கு ஏன் என்று அவளது தோழிகளிடம் கேட்கனும் போலவும் ,இருந்தது கேட்டால் ஏதும் நினைபார்களோ என்ற பயம் வேறு .

ஆனால் அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் சுகி இருந்ததால் அவனால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

இரண்டு மூன்று நாட்களாக ஒரே காச்சலாம் வைத்தியசாலை இருக்கின்றாள் என்று விபரம் சொன்னால் சுவாதி!

உள்ளத்தின் தேடல் தான் உஸ்ணம் என்பதா?
உனக்கும் என் மீது காதல் என்பதா?
உண்மை புரியுமா சகியே?
உழவன் மகன் நானடி.
உழுது வாழும் பூமியில்
உள்நாட்டு யுத்தம்
உழுத வயல் எல்லாம்
உருக்குலைந்து போனதடி.
ஊருக்குள் புத்தன் வடிவம்
உருப்படாத இனவாதம்
உனக்கு ஏன் இந்த பிடிவாதம்!
என் மீது ஏன் பிடிமானம்???
        (ரகுவின் நாட்குறிப்பில் இருந்து )


நகரில் இருந்த பிரபலமான தனியார் வைத்தியசாலை அது.காய்ச்சல் என்று அனுமதித்து இருக்கும் சுகியை  போய் பார்கவேண்டும் என்று எண்ணத்தின் வண்ணம் வானவில் கோலம் காட்டியது ரகுவிற்கு .


ஆனால் தனியாக தான் சென்று பார்பது நல்லது இல்லை அதனால் பல பிரச்சனைகள் வரும் ஒரு பெண் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது உறவைத் தவிர தனிய ஒருவன் போவது கண்டநாள் முதல்  பிரசன்னா போல வம்பில் முடியும் செயல் என்பதை அறிந்தவன் ரகு .


எனவே சுகியின் தோழிகளுடன் சேர்ந்து அவர்கள் கூட படிக்கும் பையனைப்போல ரகு வைத்தியசாலைக்கு போனான்.

ரகுவின் நல்ல நேரம் அங்கே சுகியின் குடும்பத்தினர் யாரும் இல்லை.இருந்தால் புலன் விசாரனையின் பின் நாளைய தீர்ப்புக்கள் தீ யாகும் இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு திருட்டுப்பயலோ மாப்பிள்ளை ?கட்டப்பஞ்சாயத்து கூடினால் காணாமல் போகும் கனவுகள் மட்டும்மல்ல என் குடும்பம் என்ற கோபுரவாசலும் தான் !

தொடரும்...............!!

01 March 2013

விழியில் வலி தந்தவனே!!!-அங்கம் -9


தீர்வுத்திட்டம் என்று ஒப்பந்தம் போட்டு! ஓடோடி உலக நாடுகளுக்கு தமிழருக்கு தீர்வு கொடுக்கப்போறோம் .என்று சமாதான தேவதையைக்காட்டிக் கொண்டே !இனவாதிகள்  .

சர்வதேசங்களில் சஞ்சாரம் செய்து தம் யுத்த தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு மக்களின் அமைதிக் காலங்களுக்கு சாவுமணி அடிக்க. சமாதான தேவயையின் கழுத்திற்கு கயிறாக மாவிலாறு கதையை ஊடகங்களுக்கு திறந்த விட்ட போது சமாதான தேவதை தன் மரணத்தின் பிடியில் இருந்தாள்.

யுத்தமேகம் மெல்ல மெல்ல அவளை விழுங்கிக்கொண்டு இருந்தது.மாவிலாறு மீட்பு என்று கிழக்கில் இருந்து தொடங்க போக்குவரத்துக்கள் தடைப்பட்டன மீண்டும் வன்னி முடங்கிப்போனது !

தென் இலங்கையில் இருந்து சுற்றுலா போர்வையில் திருடிக்கொண்டு போன பொக்கிசங்களான கோயில் சிலைகளும் ,தளபாடங்களும்  ,ஒருபுறம் என்றால் !


திடீர் நவீன சுற்றுப்புற சுகாதாரிகள் பழைய குப்பை என்று இரும்புகள் ஏற்றிச் சென்ற வீதியும் ,இணைத்தலமை நாடுகளின் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் வாயில் ஓயாமல் ஒலித்த வீதியான A---9. ,விலங்கினைப்பூட்டிக்கொண்டது .இனவாத வெறியர்களின் வல்லமையால்.

வவுனியாவுக்கான பாதையும் வடக்கில் யாழ்பாணத்துக்கான பாதை முகமாலையிலும் முடங்கியது. கிளிநொச்சி,முல்லைத்தீவு இரண்டும் தனித்துபோனது இனி ஒரு விதி செய்வோம் என்பது போல ஈழப்போர் வரலாற்றில் கிளிநொச்சி,முல்லைத்தீவு இரண்டு மாவட்டங்களும் ஈடுஇணையற்ற ஒப்புவமை சொல்ல முடியாத பூமி .

ஆம் இங்கு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் முழு சுமைகளையும் தங்கள் தலையில் சுமந்தவர்கள்.கலிங்கத்துப்பரணியைப் போல படித்து தெரிந்ததைவிட பார்த்து தெரிந்தவர்கள் அவர்கள் என்பதே வாழும் வரலாறு!

இங்குள்ள மக்களுக்கு யுத்தம் ஒன்றும் டாலர் தேசம் போல புதியது இல்லை என்வே சில ஆண்டுகள் நிலவிய சமாதானத்தை இனவாதிகளின் நாடகத்தை 1956 முதல் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவர்களுக்கு இந்த 2002 நாடகத்தையும் அவர்கள் மறக்க அதிக நாட்கள் தேவைப்படவில்லை.


புதிதாக தோற்றம் பெற்ற நவீன ஐரோப்பிய சொகுசு வடிவங்களான கட்டிடங்கள் ,மற்றும்  சுற்றுலாப் பயணிகளின் திடீர் வரவு இவைகளைத் தவிர சாமனிய மக்களுக்கு சமாதானம் வேறு எதையும் சொல்லவில்லை. 

அமைதிக்காலத்தில் ஐரோப்பாவுக்கும் ,அண்டை நாடுகளுக்கும் சொன்னது போலவும் விருந்துபவசாரம் செய்தது போலவும் எந்த வசந்தமும் வரவில்லை .


என்ன சில ஆண்டுகள் குண்டு மழையும் ,குருதி மழையும் இல்லை அவ்வளவுதான்.

ஆனாலும் ஆழஊடுருவும் படையணி அங்கென்றும் ,இங்கொன்றுமாகவும் ஆடியது கொலை வெறித்தாண்டவம்.

மீண்டும் யுத்தமேகம் சூழந்தாலும் தனது வழமையான வாழ்கை முறை மாறவில்லை இயல்பாகவே இருந்தது.

மீண்டும் தெருவுக்கு தெரு மரண ஓலம் கேட்கத்தொடங்கியது கார்க்கில் யுத்தம்  போல வன்னி மண்ணில்.

 இவரின் மகன் வீரச்சாவாம்,அவரின் மகன் வீரச்சாவாம்,இவன் வீரச்சாவம் அவன் வீரச்சாவாம்,கிபிர் அடிச்சு அவர் செத்துட்டாராம் இவர் செத்துட்டாராம் என்று மக்களின் பேச்சுக்களில் கலந்து போனது.மரணம் என்று நாளிதழலில் வரும் விளம்பரம்போல அல்ல இது உணர்வுடன் கூடிய கவலை ரேகை!

"ஈழத்தில் போர் தீர்ந்து கொடி முல்லை பூ பூக்கவேண்டும் "என்று ஒரு கவிஞன் சொன்னது போல அப்போது வன்னிமக்கள் விரும்பியது யுத்தம் இல்லாத ,பொருளாதார தடையில்லாத, பட்டினி இல்லாத உலகைத்தான்.!

உன் மண்ணுக்காக நீ என்ன செய்தாய் என்று யாரும் கிளிநொச்சி,முல்லைத்தீவில் வாழ்ந்த இருந்த மக்களை கேட்கமுடியாது ?விரும்பியோ ,விரும்பாமலோ , ஓவ்வொரு வரும் தம்மால் ஆன பங்களிப்பை நிச்சயம் வழங்கியிருந்தனர்.

அறிவாலயத்தில் முதுமையிலும்  பதவி ஆசைவிடாது ஈழத்தவரை வைத்து தனது அரசியல் இலாபம் தேடும் பஞ்சனையில் படுத்துறங்கும் தாத்தாவுக்கு தெரியுமா ?இங்கே அவரது வயதில் உள்ளவர் எல்லைப்படை பயிற்சி பெற்று களமுனைக்கு சென்றது.

யுத்தம் என்றால் மக்கள் சாவது இயல்பு என்ற அம்மாவுக்கு தெரியாது ?தன் சாவுக்கு கொல்லி இடுவான் என்று வளர்த்த பிள்ளை வீரச்சாவினைத் தழுவி வித்துடல் ஆகி வீடுவந்த போது கதறிய தாயின் வலி !

கல்லும் கரையும் இந்த அவலம் பார்த்தால் .கல் நெஞ்சுக்காரி காங்கிரஸ்காரி கட்டையில் போவாள் என்று கதறிய தாயின் குமுறல் எல்லாம் இனவாதப்பெருமை பேசும் ஊடகம் பேசியது இல்லை தென் இலங்கை மக்களிடமோ ,வெளியுல மக்களிடமோ தணிக்கை என்று தென் இலங்கையில் பொய் உரைக்க இருக்கு லங்காபுவத் .


போர்களம் என்பது எல்லோரும் பார்கமுடியாத ஒரு இடம் அது நாட்டுக்காக உயிர் நீக்க துணியும் வீரர்கள் மட்டுமே பார்க்ககூடிய வீரம் விளைஞ்ச பூமி!

ஆனால் கிளிநொச்சியில் ,முல்லைத்தீவில் இருந்த ஓவ்வொறு மக்களும் போர்களத்தை கண்டவர்கள். அதற்காக இவர்கள் எல்லோறும் புலிகள் என்று தென் இலங்கை அரசு கூறியது போல அர்த்தம் இல்லை .பிறகு அவர்களது வாழ்விடமே போர்களமாக மாறுகின்றபோது தன் இருப்பை தக்க  வைக்க என்ன செய்யமுடியும்.?

ரகுவின் உயந்தர வகுப்பு காலம் ஓர் ஆண்டுகள் ஓடிவிட்டது.!

சுகி பத்தாம் தரத்தில் இருந்து பதினோராம் தரம் இந்த வருடம் அவளுக்கு பதினோரம் தர பரீட்சை இருக்கின்றது .இதில் கவனம் செலுத்தி படித்தால் தான் உயர்தரத்தில் நுழைய முடியும் .ஆனால் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இந்த ஒருவருடத்தில் ரகு தன்னை தன் காதலை புரிந்துகொள்ளவில்லையே ?என்ற வருத்தம் அவளுக்கு.




"என்னவனே உன் நினைவில் உருக்கும்
என் இதயத்தின் வலியை நீ அறிவாயோ?
அறிய மாட்டாய் !
கல்நெஞ்சக்காரன் நீ
என் பெண்மையின் நாணம் விட்டு
உன் மனதில் வாழ்க்கை வரம்
யாசித்துக் கேட்டேன்.

காலம் எல்லாம் உன் மடியில்
கிடக்கும் ஒரு குழந்தையாக
வரம்  தருவாயா அன்பே ?என் மணளா
அன்பில் உருகும் துணைவியாய்
என்றும் உன்னுடன் நான்!

என்னை திருடும் கள்வன் நீ
தினம் தோறும் என்னை 
திருடிச்செல்கின்றாய் கனவில் மட்டும்
நேரில் எப்போதடா?
கைபிடிப்பாய் ரகுவம்சம் 
காண்பது எப்போது??

தொடரும்...