30 April 2012

நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை!

வணக்கம் உறவுகளே !!

மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில்  மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில்  சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து  விட்டு ரசிப்பேன் சின்னவயதில்!  அப்போது இருந்து சந்தனமேடை  ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் .

இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன்.

வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது.

அப்போது நான் பார்த்த் கேட்ட விடயங்களை என் இரண்டாவது தொடரில் தொடர்கின்றேன் .

எனக்கும் ரயிலுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் போல தொடர்ந்து பல பயணம் ரயிலுலோடு !

பாரிசிலும் நான் ரயிலில் சந்தித்த காதல் கதையை தொடராக தருவேன் கொஞ்சம் விடுமுறையின் பின்!

 ரயிலில் அதுவும் யாழ்தேவியில் ஒரு பக்கத்தில் இருந்து உடரட்டையில் இன்னொரு பக்கத்திற்கு வியாபாரம் காரணமாகவும் உறவுகளைச் சந்திக்கவும் என் பயணித்த நாட்கள் அதிகாலையில் யாழ்தேவியிலும் வார இறுதியில் உடரட்டையிலும் என ஓடியது.

விற்பனைத் தொழில் தந்த  அனுபவம் மறக்க முடியாது .

தொழில் தாண்டி நான் ஏன் அதிகம் உரடட்டைக்கும் யாழ்தேவியிலும் பயனித்தேன் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் கடந்தவாரத்தில் இருந்து இடைவிடாது ஒலிக்கின்றது என் காதில்!கூடவே குத்தாட்டம் மனசுக்குள்!

கந்தப்பு ஜெயந்தன் இசையில் அவரோடு சேர்ந்து பாடியிருக்கும் பாடகி பிரதா,ஜெயரூபன் .

கவிதைக்குச் சொந்தக்காரர்-திரு. T.சதீஸ்காந்த.

பாடல் ஒலி/ஒளி மிகவும் எனக்கு பிடித்திருக்கின்றது .காட்சி அமைப்பில் பிரியந்தன்.  செய்திருக்கும் புதுமை. காட்சியில் இருக்கும் இயல்பு மீண்டும் நம்மவர்களின் திறமையை பட்டொளிகாட்டி மின்ன வைக்கின்றது.

  காந்தனின் தொடர் இசைப்பயணத்தில் இந்தப்பாடலும் ஈழத்து இசையில்  இந்தப்பாடல் இசையின் தாக்கம் இனி பலரையும் மெல்லிசை குறுவட்டு செய்வதற்கு தூண்டு கோலாக அமையும் என்பது என் எண்ணம்.

ஈழத்து இசைக்கு ஊடகங்கள் காட்டும் தொடர் அசமந்தப்போக்கு  என்று தான் தீருமோ ???

என்றாலும் ஜெயந்தனின் இந்தப் பாடல் சமுகதளமான முகநூலிலும்,யூத்டூயூப்பிலும் இணைந்து இருப்பதால் நம்மவர் இசையை  விரும்பும் உள்ளங்களுக்கு இப்போதைய நவீன வசதி இன்னொரு தளத்தினை அல்லது சந்தையை திறந்து விட்டு இருக்கின்றது.

இலத்திரனிய ஊடகங்கள் தொடர்ந்து ஒலி/ஒளி செய்து மக்களிடம் போக வழிநடத்த  தயங்கினாலும் முகநூல்  ஊடாக பலர் கண்டு களிக்கிறார்கள்.

 அதனால் பயன் பெற்றவனில் நானும் ஒருவருன்!

அதன் பயனை வலையுலகம் கான  கண்டுகளுக்கட்டும் உறவுகள்.

 பாடல் வரிகள் என்னை மீளவும் ஊர் பெருமைக்கு சிக்க வைக்கின்றது

.பாடலில் என் ஊரும் வருகின்றது கேட்பது தனி சுகம் .

 கண்ணாம்பூச்சி மட்டுமா விளையாடினோம் ம்ம்ம் .

அதையும் தாண்டி.

 "நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை. "ரசிக்கின்றேன் பலதரம் கற்பனை ஊற்றை

".உன் காதல் என்ற சிறையில் நான் ஆயுள் கைதியானேன்  ""

கவிதையின் வாசம்  .

நாம் ஊர் விட்டு ஊர் சென்று  வாழ்ந்தாலும்  யாழ் மண்வாசம் மனம் விட்டுப் போகாதே  !!

யார் எது சொன்னாலும் (பிரதேசவாதம்) என்றாலும் அதில் இருக்கும் தனித்துவம் வார்த்தையில்  அடக்க முடியாது.

பிரியந்தனின் படத் தொகுப்பு பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.

பாடல் முடிவில் நானும் இந்த புலம்பெயர் வாழ்வை விட்டு ஊர் ஓடிவிட மனம் துடிக்குது. எனக்கா காத்திருக்கும் என் காதல் மனைவியை  கான ஆனால்!!!!ம்ம்ம்ம்ம்

கேட்டு ரசியுங்கள் நம் படைப்பை!

ஜெயந்தனின் முகநூல் இதோ-Facebook link- http://www.facebook.com/pages/MusicDirector-K-Jeyanthan/195797620434975

27 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-36

பின் தூங்கி முன் எழுவாள் கஸ்தூரிபாய் என்பது காந்தியின் கதை .

அதுபோல !சுருட்டுக்கடையில் வேலை செய்பவர்களும் அன்நாட்களில் பின் தூங்கி முன் ஏழுவார்கள்.

தூங்குவதுக்கு பயன்படுத்துவது படங்குச் சாக்கு.

சாக்கை இருபுறத்தாலும் பிரித்து நீண்டதாக்கினால் படங்கு தயார்.சாக்கில் தூங்கினால் பதுளைக் குளிருக்கு இதமாக இருக்கும்.

பஞ்சணையை விட இதுதான் சொர்க்கம்..சாக்கு மாடு,கருவாட்டுச் சாக்கு,ஊத்தைச்சாக்கு என சாக்கு பல கதைகள் பேசும்.

அதிகாலையில் தவம் அண்ணா முதலில் எழும்பியதும் ..

படுத்துக்கிடப்பவர்களை எழுப்பி விட்டுப் போவார் குளிக்க.

. அப்போது தான் அதிகாலையில் இன்னும் அதிகம் தூங்கணும் என்ற ஆசைவரும். கனவு வரும் .

அப்போது சிலருக்கு கிழக்குவாசல் ரேவதியும் ,சின்னத்தம்பி குஸ்பூவும்,கரகாட்டக் காரன் கனஹாவும் கனவில் வரும் சொப்பன சுந்தரிகள்.

 இன்னும் என்னடா தூக்கம்? என்று பச்சைத் தண்ணீரை முகத்தில் ஊத்துவார் தவம் அண்ணா.

எருமைமாடு ,நாயே இன்னும் பல நன்மொழிகளுடன் மற்றவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு எழும்பினால் பின் வழியால்  முன்னால் போய் குளிர்த்துவிட்டு வெள்ளைச் சாரத்தோடு கடை திறப்பார்.

அப்போதுஇரட்டைக்கதவை மட்டும் திறந்து கூட்டியதும் மஞ்சல் தண்ணீர் ஊத்திவிட்டு .

முதல் ரயிலுக்குப் போவர்களுக்கு வியாபாரம் தொடங்கி விடுவார்.

மூக்கையா வழிகாட்ட முருகேஸன்,ரவி ,ராகுல் என எல்லோரும் குளிக்கப் போகும் இடம் தான் ஆறு.
                                                 தெய்யானாவ  ஆறு  இதில் தனிமரமும் பின் நாட்களில் குளித்தேன்!!!

 இங்கே தான் முதலில் ஆற்றில் குளித்த அனுபவம் முருகேஸனுக்கும் ரவிக்கும்.

ஆற்றில் அதிகாலையில் குளிக்கும் போது ஆவி எழும்பும்.

 பனித்துளி புகார் கொட்டும் உடம்பில் ஒரு குளிர் வெடவெடுப்பு அடிக்கும் .

அப்படியே குதித்தால் ஆற்றில் அந்தக் குளிர் பறந்து விடும்.

அந்த வீதியில் சுருட்டுக்கடையில் இருப்போர் எல்லாம் வம்பளப்பது அந்த ஆற்றங்கரையில் தான்.

 இந்த வீதியில் இருப்போர் எல்லாம் ஓரே ஊர்க்காரர்கள் தான் 1954 முதல் இன்று வரை அதுமட்டுமல்ல .

ஏதாவது ஒரு குடும்ப வழி உறவாகவும் இருக்கும்.

என்ன மூக்கையா ?புதுசா ரெண்டுபேர் வந்திட்டனம்.என்று தொடங்கும் பேச்சு

.ராகுல் நீ ஏண்டா இங்க வந்தனீ ?

ஊரில் இருந்து படித்து என்ஜினியர் ஆகிறத விட்டுட்டு !

சுருட்டுக்கடையில் சுருட்டுக்கு கோடாப் போடவும் ,கொட்டுமோ அடிக்கப்போற ?

உன்ற கொம்மான் கடையை இனி நீதான் நடத்தப்போறீயோ.?
இல்லை சிறீ அண்ணா.!

இவர் தான் மேனாகவின் மூத்த அண்ணா!

 இங்கு வேற கடையில் பொறுப்பாக வேலை செய்பவர்.

கேள்விப்பட்டனியோ ராகுல் !
என்னது சிறீஅண்ணா.?

உந்த குமரன் வேலி பாஞ்சுவிட்டான் .

என்ன சொல்லுறீங்க ?
குமரனோ அண்ணாவோ!!
 ஊரில் கலை அக்கா அவர் வருவார் என்று கலியாணத்துக்கு காத்திருக்கின்றா !

ம்ம்ம் நானும் தான் காத்திருக்கின்றன் எங்க அவள் மசியவில்லை  .

உவன் சிங்களத்தியை கட்டியிருக்கின்றான்.

 ஊரில் இப்ப சண்டை என்பதால் இன்னும் கதை போகவில்லை.

 இனி இவனும் இங்க இருந்து ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டியது தான்.

 என்ன சிறீ அண்ணா ?இவன் சின்னப்பொடியனோடு பேசுற போச்சா!

 இல்லடா தம்பி முருகேசா.

 இவன் இனி இங்க இருக்கப்போறான்.
 தானே  எல்லாம் சொல்லி வைக்கணும்.

 பிறகு யாரையும் இழுத்துக் கொண்டு ஓடிவிட்டால் !!

பங்கஜம் சீமாட்டியை உங்களுக்கு சரியாகத் தெரியாது!

  தன்ற மகன் இங்க (பதுளையில்)கட்டின தால்  .

இன்னும் சேர்க்கவில்லை குடும்பத்தில்.!

 .ம்ம நான் அந்த மனிசியோட எத்தனை சண்டையை நேரில் பார்த்திருக்கின்றேன்.!

முக்கையா எப்படி நேற்றுப்படம்.

 கரகாட்டக்காரணில் கனஹா ஓடும் போது நீயும் ஓடினியோ பின்னால் .

நான் ரெக்ஸ் இல்தான் இருந்தன்.

நீ கவனிக்கவில்லை.

நீ காசுக்காரன் ஓடிசியில் இருப்பாய் 12 ரூபாய் கொடுத்து .

நான் குடும்பஸ்தன் முதல்வகுப்புத்தான் கட்டுபடியாகும் 7 ரூபாய்.அதிகம்  படம் பார்க்கமுடியாது

.ஆனாலும் இந்த கரகாட்டம்  அடுத்த றொக்கில் தேர் வரும் போது !
                                             இன்றைய றொக்கில்  காளி அம்மன்  இது !!!
இந்த ஆட்டம் இருக்கும் வித்தியாசமாக.

நீங்க நல்லா ஆடுவீங்க என்று தெரியும் மூக்கையா !

இந்த ராகுலுக்கு ஆடிக்காட்டுங்க திருவிழா நேரம்.

சரி நீங்க குளியுங்கோ நான் போறன் .

முருகேஸ் அண்ணா ,ரவி அண்ணா வாங்கோ போவம் !

அப்போது அருகில் இருந்த சாப்பாட்டுக் கடையில் ஒலித்த பாடல் இது -என்கிறான் ராகுல்!
அப்புறம் சொல்லு.....
///
கோடா-சுருட்டுக்கு பூசும் திரவம்-இன்னும் விளக்கம் பின்னால் வரும்.
கொட்டு-கடதாசியில்சற்றுவது

வம்பளப்பது-வெட்டிப்பேச்சு- யாழ் வட்டாரச் சொல்லு.
கொம்மான்.....-மாமா-யாழ் வட்டாரச் சொல்லு.
வேலி பாய்வது-எல்லைதாண்டிய கலியாணம்.
ரெக்ஸ்-பதுளையில் இருக்கும் ஒரு திரையரங்கு பெயர்.

26 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-35

இந்த வீதியில் சின்னத்தாத்தா முன்னர் இருந்தவர். 1983 கலவரத்தோடு வெளியேறியவர் மீளவும் நீண்ட வெறுமை உணர்வோடு உள்ளே நுழைய!

 ராகுல் ஆரம்பத்தில்1989இல்  ஈசன் மாமா கடை வைத்திருந்தது இந்த வீதியின் ஊடறுத்துச் செல்லும் பசார் வீதியில் .
                                               இது இன்றைய  பதுளை பசார் வீதி!
ஊர் முழுவதும் நேவியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் மற்றவர்கள் வன்னிக்குச் சென்ற பின்னும் இனி இந்த நாட்டில் விடிவு இல்லை என்பதை அப்போதே தெளிவு பெற்றதன் .பயனாகவோ தெரியாது ?

சுருட்டுக்கடையை வியாபாரத்தை விற்றுப் போட்டு புலம்பெயர்ந்து ஓடிவிட்டார்.

 அங்கே அவருடன் இருந்த தவம் அண்ணா இங்கே செல்வன் மாமாவோடு வந்து விட்டார் .என்பதை உணர்ந்தான் ராகுல் .

தந்தை வழி மாமா போனபின். தாய் வழி மாமாவிடம் அடைக்கலம் தேடி அந்த சுருட்டுக்கடையில்  உள்நுழைந்தான்.

புதிதாக சுருட்டுக்கடைக்கு வேலைதேடி வந்த முருகேஸன் மற்றும் ரவி அண்ணாவோடு உள்ளே சென்ற போது !

முதலில் வரவேற்றது வெற்றிலைத் தட்டும் ,சுருட்டுப் பெட்டியும்.

 அதுகடந்து பலசரக்கு சாமான்கள்.

அது கடந்தால் யாழ்ப்பாணப் புகையிலைச் சிற்பம்.

சிரிமாவின்  சுதேசியக் கொள்கையில் அதிகம் பொருளாதார முன்னேற்றம் கண்டவர்கள் இந்த  புகையிலை பயிர் இட்ட விவசாயிகள் .என்றால் மிகையில்லை!!

 புகையிலை என்றால் அது  யாழ்ப்பாணம் அதுவும் தாவடி ,கோப்பாய் கோண்டாவில் ,தம்பசிட்டி,கொஞ்சம் நீர்வேலி என நீண்ட பிரதேசங்கள் புகையிலை பயிர் இட்டார்கள் .

புகையிலைத் தோட்டத்தில் எத்தனை காதல் கருவுற்றது என்று எஸ்.பொவின் வேலி சிறுகதை சொல்லும்.

  சிவகுமாரன் எப்படி சுடு பட்டான் வலக்காலில் என்றால் இந்த புகையிலைக்கட்டையும் ஒரு காரணம்.!

போராளிகளுக்கிடையே தோன்றிய  சகோதரப் படுகொலை வேட்டையாடல் இந்த புகையிலைத் தோட்டத்தில் புதையுண்ட வரலாறு இன்னும் பலர் வசதியாக மறந்தது.


புகையிலை மூலம் பெறும் சுருட்டுச் சுற்றிய தொழிலாளர்கள்  வளர்த்துவிட்ட இடதுசாரி  சண்முகதாசனும்  ,சமாசமாஜக் கட்சியும் யாழ்பாணத்தில் பெற்ற செல்வாக்கு தென் இலங்கை அறியும்.!

அந்தப்புகையிலைக்கு 25 புகையிலையை ஒன்றாக குஞ்சம் கட்டி பாணி போட்டால் !

ஒரு கட்டுப் புகையிலை.  அதற்கும் பல விதம் இருக்கும் அல்லது பலசாதி என்று சொல்லமுடியும் .

அதில் சொரி புகையிலைக்கு இனவாதம் தாண்டிய கிராமத்து அப்புகாமியும் ,விஜதாசாவும் ஆண்டு ஆண்டுகாலமாக அடிமையாக இருந்தார்கள். இந்த 1991 இல் .

நேரடியாக ராகுல் பார்த்தவன் !

அங்க நிற்காத உள்ளே போ என்று மாமாவின் அதட்டலுடன் உள்ளே போனால் !

சமையல் குசினி அருகில் தண்ணீர்த் தொட்டி .

பின் பக்கம் ஒரு அறை என சிறிய கடை அது .

அங்கே போனதும் தாத்தா முதலில் குளிர்த்தார் .

கொண்டு வந்திருந்த வேட்டியை கட்டினார் .

தம்பி இன்று இதில் குளியுங்கோ நாளை முதல் குளிக்கும் இடம் வேறு என்று தவம் அண்ணா சொல்லியதும்.
 எல்லாரும் குளித்தோம்.!

மாமா வியாபார அமளியில் இருக்க .

தவம் அண்ணா வந்தவர்களுக்கு கோப்பி ஊத்தினார் .யாருமே கடையில் கோப்பியைத் தவிர தேயிலைத் தண்ணி குடிப்பதில்லை .

தம்பி எப்படி ஊர்ப்புதினம் .???
ம்ம்ம்ம் என விசாரனை முடிந்ததும்.

 முருகேஸனுக்கும் ரவிக்கும் தங்களுடன் கொண்டு வந்த உடமைகள் வைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்தார்  தவம் அண்ணா.

 சன்லைட் சவக்காரம் வரும் பெட்டியில் தான் அவர்களின் உடமை வைக்க வசதி செய்தார்

.தம்பி பதினொண்டு எல்லாம் இங்க சரிவாராது.

 இந்தாங்கோ கோடன் சாரம்

. இனி இதுதான் இங்க கட்டணும் .

என்றுதன்னிடம் இருந்த சாரத்தைக் கொடுத்து விட்டு சமையல் வேலையில் மும்மரமானார்.

டேய் நீ இன்னும் என் பார்க்கின்றாய் ?

இந்த உனக்கும் சாரம்.

.இனி எல்லாம் பதினொண்டு போட்டமுடியாது !

அப்புறம் பாட்டி எப்படி இருக்கின்றா ?
இன்னும் சீமாட்டி சத்தம் போடுகின்றாவா ராகுல் ?

இல்ல தவம் அண்ணா .

பாட்டியை ஊரில் விட்டுட்டு நாங்கதான் ஓடி வந்தம்.

 கண்கள் பனித்துளியை சிந்தியதை கண்ட தவம்  அண்ணா !
உது என்ன பொம்பளப்பிள்ளை போல அழுதுகொண்டு!

 நட்டக்கிறது .நடக்கட்டும் .

 வா இந்த பம்பாய் வெங்காயத்தைஉரி.

 அப்புறம் ஊர்ப்புதினம் சொல்லு!!
அப்புறம் சொல்லுறன்!...

///
பதினொண்டு-நீள்காற்சட்டை/டவுசர்!
கோடன் சாரம்-லுங்கி.
சாவற்காரப் பெட்டி - அட்டைப்பெட்டி தமிழ்கத்தில்!
பாணி-புகையிலைக்கு பூசும் ஒரு கழி பின்னால் இதன் செய்முறை சொல்வான் ராகுல்!
அப்புறம்-மலையகவட்டார்ச்சொல்-பிறகு/பேந்து யாழ்மொழியில்

25 April 2012

நண்பனோடு புலம்பல்!

வாங்க பதிவு படிக்கமுன்!


காக்கா பிடிக்கின்றான்,பண்ணாடை,வால்பிடி வக்காலத்து,கடுப்பு ஏத்துறான்,முட்டாள்,கொசுத்தொல்லை,அரசியல் தெரியாதவன் ,விளம்பரத்துக்கு அலைகின்றான், மதவாதி,திணிக்கின்றான் ,கஸ்ரப்படுத்துறான் ,இன்னும் ...இப்படியே திட்டினாலும் நான் தனிமரம்..என் வலை என் விருப்பம் மயக்கம் போட்டால் சின்னவன்  நான் தனிமரம் பொறுப்பு அல்ல!!!
இனி
...........................

வலையுலகில் எனக்கு பல உறவுகள் கிடைத்திருக்கின்றனர்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித்தியாசமான தனித்துவத்துடன். என்னோடு பின்னூட்டம் வாயிலாக ,கருத்துக்களாகவும். அறிவுறுத்தலாகவும் ,என்னையும் நண்பர் வட்டத்துக்குள் இணைத்திருக்கின்றார்கள்.

 அப்படி பலரில் .பதிவுலகில் கிடைத்த நேசிப்பு மிக்க நண்பன் தான் .

நேற்று பதிவுலகில் விடை பெற்றுச் சென்ற நண்பர்கள் வலைப்பதிவாளர் நண்பன் ராச்.

வலைப்பதிவுகள் படிக்கும் ஒரு வாசகனாக முதலில் அவனோடு அறிமுகம் .அந்த அறிமுகம் பின் அண்ணா என்று அன்போடு
முகநூல் வாயிலாகவும், தந்தியில்லா அலைபேசி ஊடாகவும்(skipe) ,சமயத்தில் கைபேசியிலும் தம்பி நலமா ?என்று உரிமையோடு பழகும் நட்பு நம் இருவருக்கும்

.அவனோடு பல விடயங்களில் பதிவுகள் சார்ந்து ஊக்கமான விடயங்களில் அவன் வலையில் பின்னூட்டம் இட்டத்தில் .

எனக்கு மிகுந்த இன்னும் பல நண்பர்களை பெற்றுந்தந்தது.

 அதன் பின் தனிமரமும் பலர் கவனிக்கும் மரமாகியதில் அவன் பங்கை நான் மறவேன்.

.அவனுக்கும் எனக்கும் பலவிடயங்களில் பதிவுலக அரசியல் தாண்டிய நட்பு இறுக்கம் தொடர்வதில் சந்தோஸம் .

அந்த சந்தோஸம் நேற்று விடைபெறுகின்றேன் அண்ணா தனிபட்ட பொருளாதாரத் தேடலுக்கு என்ற போது ஒரு அண்ணாவாக இருந்து மிகவும் மகிழ்ச்சி. சகபதிவாளனாக கவலை(நீ பதிவாளனா?? நானா சொல்வது)

மதுரைக்குப் போகும் போதும் .மதுரையில் இருந்தும் தனிப்பட்ட முறையில் என்னோடு உறவாடியவன்  அலைபேசி ஊடாக .

விரைவில் தொடர் பதிவுகள் வந்து எழுதுவேன் தொடர்ந்து என்று சொல்லியவன் அவனின் ஒரு வாசகனாக/நண்பனாக அவனின் வெளியேறல் வேதனையளிக்கின்றது எனக்கு.

நான் வலையுலகை விட்டு விரைவில் வரும் தொடரின் பின் வெளியேறுவேன் என்பதை முன்கூட்டியே சொல்லியிருந்தேன். அவனுக்கு .

அதற்குள் அவன் வெளியேறியது  அதிற்ச்சி எனக்கு.

 ராச் எழுதிய பலபதிவுகளில் நான் பின்னூட்டம் இடும் போது  நடிகர் விஜய் பற்றிய சில கலாய்ப்பு பின்னூட்டங்கள் சிலருக்கு கடுப்பு தந்து.

 நட்பு வேண்டாம் என்று ஓடியபோதும் அவன் என்னோடு நேசன் அண்ணா எல்லா சினிமாவின் ரசிகன். இருட்டறையில் எதிர்கால முதல்வரை தேடும் நடிகர் வெறியன் அல்ல என்று.

 வேற இடங்களில் எனக்காக வாதாடியவன்.
 அதற்கு அவன் வேண்டிய வெகுமதி வார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன் .

வேண்டிய உள்குத்துப்பதிவையும் அறிவேன்.

 அதற்காக அவன்  எனக்கு காவடி தூக்கியதோ. வக்காலத்து வாங்கியதோ ,வால் பிடித்ததோ இல்லை .

தன் விருப்பம் எப்படி என்று மட்டும் கருத்துச் சொன்னான் .

என்னை சில இடங்களில்(பதிவுகளில்) கோபம் வேண்டாம் அண்ணா என்பான்.

 அவனோடு முரண் பட்டேன் தொடர் பதிவு  விடயத்தில் பதிவுலகம் தாண்டி. அதற்காக கவலைப்பட்டதில்லை என்று அவன் அறிவான்.

நான் என் கருத்தைச் சொல்கின்றேன்.
 எனக்கு வட்டத்துக்குள் நின்று பழகியது இல்லை என் வட்டம் ஆன்மீகம் பக்கம்.வலையை விட்டு ஓடியது ஆன்மீகம் பயணம் என்பதில் தனிப்பட்டமுறையில் நன்கு அறிவான்.

அவன்மீது எனக்கு தனிநட்பு பதிவுலகம் தாண்டி  இருக்கு.

 துசியை நேரில் பார்த்த போது !துசிகேட்டது ?எப்படி நேசன்ணா ராச் உடன் இப்படி பாசம் வந்தது என்று.

 துசியும் தம்பி கந்துவும் இப்போது எனக்குத் தம்பி தான்.

 கந்து பல தொழிநுட்ப உதவி மூலம் சில பாடல் ,படம் வலையில் ஏற்றுகின்றேன்.



ராச்சுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் ஓரே சிந்தனை அதிகம் கவரும் தானே ! துசியையும் ,கந்துவையும் கடுப்பேத்தவே வில்லங்கமான விடயங்களை முகநூலில் போட்டு கொலைவெறி ஆக்குவது தனிக்கதை.

 ராச்
என்னிடம் பொற்கிழியும் பொருள்முடிச்சும்  ஏதும் வாங்கியவன் அல்ல .

முதல் விருது தந்தவன் அவனே. வலையில் இருக்கும் சங்கிலி . என் எழுத்துப்பிழைகள் தாண்டி இந்த அவசர உலகில் அவசரத்தில் பதிவு எழுதும் என் நிலை புரிந்தவன்

.அந்த விருது எனக்கு கொடுத்ததற்கு  அவனுக்கு அவன் நட்பு வட்டத்தில் சங்கடங்களை கொடுத்ததும் நான் அறிவேன்.

பல வற்புறுத்தலுக்குப் பின் அந்த விருதை வாங்கிக்கொண்டேன் .
அவன் தந்தும் அதை மீளவும் ஹேமா எனக்குக் கொடுத்ததும் விருது கிடைக்கணும் என்றாள் எந்த தடை தாண்டியும் வரும் என்பதை சொல்லியது.

 கவிதைக்கு ஹேமா தந்ததை மறுக்காமல் உடனே வாங்கினேன் .

அது கவிதை அல்ல யாரோ ஒரு குடும்பத்தின் வாழ்க்கை .அவை என் தொடருக்கு அதை மீள்வும் செருகுவேன்.

என் இரண்டாவது தொடருக்கு மலையகத்தில் முகம் தொலைந்தவன்.
முதலில் விளம்பரம் கொடுத்ததும் ராச் என்பது மறக்கவில்லை..முதல் தொடர் நொந்து போன ஓர்  இதயம் அவனின் விமர்சனம் எனக்கு உற்சாகம் கொடுத்தது தொடர் எழுத.

என் உயிர் நீதானே என்றான் ராச். நானோ உருகும் பிரெஞ்சுக்காதலி என்கின்றேன்.

 அன்பைத் தேடும் இதயம் என்றான் நொந்து போகும் ஓர் இதயம் என்றேன் .இப்படி பதிவு ஒற்றுமைகள் என்னையும் அவனையும் முகம் தெரியாமல் சேர்த்தது.

பதிவு போட்டால் உடனே தனிமெயில் போடு நான் இணையத்தில் இருப்பது கைபேசி மூலம் என்பதை .புரிந்தவன் அவன்.

அவனிடம் பால்க்கோப்பி கேட்டேன். இந்த பால்க்கோப்பி  சிலக்கு கொதித்தால் நான் என்ன செய்வேன் சாமானியன்???

ராச்   தந்த விருது எனக்கு மகிழ்ச்சி பதிவுலகில்.

 ஆத்ம திருப்திக்கு எழுதுகின்றேன்.

 காசுக்காக எழுதியதுக்கு  தேசிய ரீதியில் முதலிடம் தினகரன்(லேக்ஹவுஸ்) காசோலை(10000)விருது கொடுத்தது பெருமையும் படுத்தியது. பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் .ஒருகாலத்தில் அன்று 6/2/1998 இல் சந்திரிக்கா அமைச்சில் ஊடக அமைச்சர் அருகில் இருக்க பிரதிஊடக  அமைச்சராக இருந்து விழாவில் பரிசுகொடுத்த ஹிஸ்புள்ளா மறந்து போயிருக்கலாம்.  தன்னிடம் காசோலை விருது பெற்ற இந்த சின்னவன் தனிமரம் யார் என்று!

 சகோதர வானொலி சிரச ஞாயிறு இரவு 10-12 மணி வரை வரும் (நிம் அத்த நின்னய) ஹிந்திப்பாடல் நிகழ்ச்சியில் பாடலுக்கு கிறுக்கல் கவிதை (சகோதர  மொழியில்)எழுதியவன் எங்கே அன்பைத் தேடும் இதயத்தில் தொலைந்து  போனாவனோ என்று ராச் கேட்டால் இந்தப்பாடல் பரிசு கொடுப்பேன்!(அம்பலத்தார் கருக்கு மட்டை தேடக்கூடாது)


சொல்லிக்கொடுத்தாய் அருகில் இருந்து
அள்ளிக்கொடுத்தேன் அன்பை
யன்னல் திறந்து வெளியே போகாதே
நிலவு வெளிச்சம் உன்னிடம்
கூந்தலில் மறைந்துவிடும்.
இதயத்தில் இருந்துவிடு என் உயிராக...
என் நிலவே.!
என் உயிர் நீதானே!
(இப்படி கிறுக்கியவன் அவன் தொடரில் கலந்து போனேன்)



இந்த வாரக் கவிதைப்பரிசுப் பாடல் டொப் டொப்ப்   டொப்ப்ப்ப்ப்ப்ப் டுவண்டி! மறக்கவில்லை சிரச  அறிவிப்பாளர் லசந்த உங்களின் குரல் வழியாக  வந்த கவிதை அவன் பறந்து விட்டான்! பாடல் இதோ-! ராச்சுக்கு-!

24 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-34

பெட்டிக்கடை நாராயாணன் மஹாகவியின் கவிதையிலும், ஆனந்தம் லிங்குசாமியின் கதையிலும் இந்த பெட்டிக்கடை அல்லது செலவுகடை (மளிகைக்கடை)கொஞ்சம் அதிகம் பேசப்பட்டாலும்!

 இன்னும் பல கதைகள் இங்கே உறங்கிக் கொண்டிருக்கின்றது .

நல்ல தேடல் அல்லது வியாபாரம் அதனைப்பின்புலமாக கொண்டவர்கள் இலக்கிய வானில் மலராத காரணத்தாலா? என நினைக்க வைக்கவும் செய்கின்றது !

இந்த வியாபாரத்தை  மலையக பாஷையில் மற்றும் சகோதரமொழியில் சுருட்டுக்கடை என்றால் பலருக்குத் தெரியும் !

கோப்பிக்கடை என்று சகோதரமொழியில் ஒரு சின்னத்திரைத் தொடர் விசித்திரமாக  வம்பு பல பேசினாலும் .

இந்த சுருட்டுக்கடை பல இருக்கும் பதுளை உங்களை அன்புடன் வரவேற்கின்றது. என்ற நினைவுக்கல் வரவேற்றது. அதிகாலை 5.15 .

 உடரட்டையில் இருந்து சின்னத்தாத்தா ராகுல்.மற்றும் முருகேசன்,ரவி ஆகியோர் இறங்கியது 1991 ஒக்டோபர் மாதம் 4 வாரத்தில் ஒரு வெள்ளிக்கிழமை

.ரயிலில் இருந்து வெளியேறி வரும் வழியில் தான் தொடங்குவது பெரிய பாலம்.
 அதன் கீழ் ஓடுவது ஆறு .

இந்த ஆறு போய் முடியும் இடம் மட்டக்களப்பு

.பாலம் தாண்டிச் சென்றால் !

மலையகம் எங்கும் இப்படி ஒரு நகர அமைப்பு இருந்ததில்லை என்பான் மலையகத்தின் பல நகரங்களை பின் நாட்களில் வலம் வந்த ராகுல் .

இந்தப்  பாதை நேராக நடந்தால் முதலில் வருவது அரண்மனை ஆசையைத் துறந்து ஞானம் தேடிச் சென்ற புத்தனின் விகாரை.
 17ம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸன் கட்டிய முத்தியங்கணை ரஜாமஹா விகாரை(புத்தகோவில்).

 அதனை எத்தனை    மணிக்குப் பார்வையிடலாம் என நினைத்தால் !கையில் மணிக்கூடு இல்லாதவர்கள் நிமிர்ந்து எதிரே பார்த்தால் அழகிய மணிக்கூட்டு கோபுரம் தெரியும் .

அதனைப் பார்த்து யாரும் நம்பி ரயிலுக்குப் போனால்! பின் ராமராஜனின் ரயிலுக்கு நேரமாச்சுப் படம் போல "போறவளே பொன்னுத்தாயி "என்று முகாரி பாடனும்.

அதைத் தாண்டி நல்ல  நேரம் என வாழ்வில் முதலில் அதிஸ்ரம் இருக்கா ?என்று கேட்கும் அதிஸ்ரலாபச்சீட்டுக்கடை(லாட்ரிச் சீட்டு) .

அது ஆரம்பிக்கும் வீதியில் (ராகுலின் வேண்டுகோளின் படி வீதியை கூறாமல்  விடுகின்றேன்  ஒரு வீதி என்று பொருள் கொள்க) பல கடைகள் அன்நாட்களில் !

.சுருட்டுக்கடைகள்,

தளபாடக்கடைகள்,ஹோட்டல்கள்,புடவையகம்கள் நகைக்கடைகள் நகைஅடைவு பிடிக்கும் கடைகள் ,என நீண்டு செல்லும் ஒரு சராயக்கடை(டாஸ்மார்க்க) கொஞ்சம் கடந்தால்  .

இரு தியேட்டருக்கு வழிகாட்டும் உள்வீதி அதுவிடுத்து .நேரே பார்க்கும் விழிகளுக்கு சூரனுக்கு மோட்சம் கொடுத்த முருகன் இரண்டு மனைவிகளுக்கு இதயத்தில் இடம் கொடுத்த முருகன் கோவில் வரும்.


 அது கடந்து போனால் சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்தவர்களை சட்டப்பேனா சொன்ன தீர்ப்பில் தண்டனை பெற்ற கைதிகள் இருக்கும் சிறைச்சாலை .


அவர்களின் "ஓ என் தேவனே கல்வாரியில் நீ சுமந்த சிலுவையை மறந்தேனே மரியதாஸ்  "

அதனால் தான் என்னை இங்கே சிறைவைத்தாயா ?என்று கேட்பவரின் குரலுக்கு செவிகொடுக்கும் கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும்  .

அந்த தேவன் ஆலயத்துடன் முடியும்.இந்த வீதி.

 இந்த வீதியில் தான் ராகுலும் அன்று !

சின்னத்தாத்தா முன் செல்ல முருகேசன்,ரவியைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக அந்தப்பாதை யூடாக  நடந்து வந்தான் .

கனவுகள் ,கற்பனைகள் தொலைநேர திட்டம் ஏதுமற்ற விளையாட்டுச் சிறுவனனின் குழந்தை மனதோடு .யுத்தவலியைத் தாங்கிக் கொண்டு.

 இந்த வீதியில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் சுருட்டுகடை வைதிருப்போர்  என்று சொல்லுவார்கள் மலையக உறவுகள் .

அவர்களிடம் மூன்று தலைமுறைதாண்டி வாழ்ந்து கெட்டவர்களும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த !(?)வீதியில் தான் அதிகம்  இருந்தார்கள். சுருட்டுக்கடைகள் போட்டு .

அவர்களின் மூன்றாவது சந்ததிகள் சிலருக்கு  வியாபாரத்தில் மட்டுமல்ல  பதுளை புகுந்த வீடாகவும்  போனது. சினத்தாத்தா முன்னே சென்றார்  செல்வன் மாமா கடைக்கு  செல்வன் மாமா கடையும் இருந்தது இந்த வீதியில்  தான்!    

யுத்தம் தந்த சாபம் என்றாலும்! அதற்கு முன் இங்கு (1954 )முதல் வியாபார நிலையகள் நடத்தப் போனவர்கள்  தீவான்கள் என்று சொல்லும் வடக்கில் இருந்தோருக்கு  தெரியாத பல சங்கதிகளில் இந்த தொலைந்தவன் இந்த வீதியில் ஒரு சாமானியவன் ராகுல் அவனின் பார்வைகள் கடந்து வந்தவையைச் சொல்லும் இனி விரைவாக.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை!        

20 April 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்..33

புரியாத வயதில் புறமுதுகிட்டு ஓடிவந்தேன்!
துங்கிந்தை தாயே!
புரிந்த போது பின் கதவால் போகின்றேன்
புழுதியில் இட்ட புழுவைப்போல !
திரும்பி வருவேன் என் திறமை அறிந்த
பின் அதுவரை வாசல் வரேன்!
(ராகுலின் நாட்குறிப்பில் இருந்து)//

அன்று இரவு கடையின் பின் பக்கத்தில் இருந்து. சின்னத்தாத்தா
ஐயாவிடம்.
" செல்லனுக்கு கடையில் நம்பிக்கையான ஆட்கள் இல்லையாம் நேற்று அங்க (பதுளையில்)இருந்து வந்த ஒருவரிடம் கடிதம் கொடுத்துவிட்டவன்


." இடையில் ஓடிவந்தது கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கின்றான் .
நானும் இந்த பொடியங்கள் இருவரையும் க்கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வாரன்  
.. ராகுலும் அங்கே இருந்தால் நல்லது என நினைக்கின்றேன்.! கூட்டிக்கொண்டு போகவோ ? 
"இங்க இருந்தால் ரூபனும் போனது போல இயக்கத்துக்குப் போய் விடுவான் மருமகன்." என்ன சொல்லுறீங்க ? 
நீங்க சொன்னா சரிதான் மாமா
 ".சின்னையா சொல்வதும் சரிதான் .
யாராவது ஒராள்.சரி நமக்கு மிஞ்சட்டும் .இவனும் சரியான குழப்படி இங்கும் வாய்க்கால் எல்லாம் அளந்து கொண்டு திரியுறான்
 " தம்பியிடம் அனுப்பி விடும் என்று அம்மாவும்(சிவகாமியும்). சரி சொல்லிவிட்டா.

 மறுநாள் காலையில் சின்னத்தாத்தா தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரண்டு அண்ணாமார் பின் தொடர ஓமந்தைவரை சைக்கிளில் பயணம் போனார்கள் 


. முன்னர் ரயிலில் வந்த பயணம் போய் இப்போது சைக்கிளில் . இடையில் தான் எத்தனை மாற்றம்!
 அந்தக் காலத்தில் அதிகம் போராளிகள் கட்டுப்பாடு போட்டது இல்லை. இரு அண்ணாமர்களும் தம் பாஸ் அட்டையைக்காட்ட வழிவிட்டார்கள்.இராணுவக்கட்டுப் பாட்டுக்கு போக. 

ஓமந்தைச் சாவடி ஊடாக சைக்கிளையும் தள்ளிக்கொண்டு வவுனியா வந்தோம்.!
 நம்பிக்கையான உறவினர் கடையில் சைக்கிள் நிறுத்திவிட்டு மதியம் சைவக் கடையில் சாப்பிட்டு விட்டு . வவுனியாவில் இருந்து யாழ்தேவியில் எறிவந்தோம்.
பொல்காவெல வரை. 


சின்னத்தாத்தா .மனதில் 1983 வன்செயலின் பின் பதுளைக்குப் போகும் புதியசூழல் பற்றிய எண்ணங்கள்! 

வவுனியாவின் மாற்றங்களை ரசித்துக்கொண்டிருந்த ராகுலுக்கு ரயிலில் ஏறமுன்னர் வாங்கிக் கொடுத்த பப்படம் என்ற சுவையூட்டியும், சோளம்பொரி வண்ணக்கலவை உருண்டையும் இருந்தது.

 பேரா நித்திரையா ?
 இல்லைத் தாத்தா . 
எப்ப போய்ச் சேருவோம்? 
இனி ஆமிக்காரன் குண்டு போடமாட்டான் தானே தாத்தா? 

இல்லை .
 அப்ப இனி ஒழுங்கா சீனி போட்டு கோப்பி குடிக்கலாம் தானே !?
 ஓம் !
உன்ற வயசுக்கு இப்படித்தான் தோன்றும்.. 
ம்ம்ம் 
ஏன் இந்த பப்படம் பிடிக்கலையா? 
இல்லத் தாத்தா . 

இந்த பப்படம் அனோமா விரும்பிச் சாப்பிடுவாள்!
 " கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுத்த ஞாபகம் வருகின்றது." 
அப்ப இன்னும் பேர்த்தியின் ஞாபகம் இருக்கா. ? 
ம்ம்ம் . 

நாளைக்கு பதுளை போனபின் பார்க்கலாம் எல்லாப் பேர்த்தியையும்.! 
நான் பார்க்க மாட்டன் தாத்தா. 
ஏன் ? 

நாங்க இத்தனை தூரம் .நேவிக்காரன் ,ஆமிக்காரன் என்று அடிக்க வெளிக்கிட்ட பின் அகதியாக அலைந்த போதும் ஒரு கடிதம் போடவில்லை 


. திருவிழாவுக்கு வந்து போனபின் இதுவரை ஒரு தபால் அட்டை கூட போடவில்லையே 

. நான் எத்தனை யானைப்படம் கொடுத்துவிட்டனான் பாட்டியிடம் சொல்லி வாங்கி

.. "ராகுல் அவங்களுக்கு எங்கட அகதிவாழ்வு தெரிந்து இருக்காது

 " ஏன் தாத்தா ? 

அதுதான் தணிக்கை இருக்கு. 

அப்படி என்றாள்.? 
ம்ம்ம் காத்தவராயன் கூத்துப் பார்த்தனிதானே? 

ஓம் சோதிமாமாவுடன்

. "அப்ப மேடையில் நடிக்கும் ஆட்கள் வரும் வரை வெள்ளை வேட்டி பிடித்திருப்பார்கள் தெரியும் தானே

." ஓம் . அது ஏன் சொல்லு?

 கூத்துப்போடுபவர்கள் வேஸம் போடனும்.
 ஆர் ஆர் என்ன உடை உடுத்தகின்றார்கள் என்று தெரியக் கூடாது.என்று . 

அது போலதான் நாட்டிலும் பலர் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தணிக்கை இருக்கு

. உனக்கு அனோமாவை பிடிக்குமா பேரா ?

ஓம் .!தாத்தா .

நிறைய கதைப்பாள்,நல்லா பலாப்பழம். ஜெயந்த் மாமாவீட்டில் இருந்து கொண்டந்து தருவாள்.முந்தி அங்க இருக்கும்போது.!

" "உன்ற பெரிய பாட்டிக்கு அனோமா பேர்த்தியைப் பிடிக்காதே .

 பாட்டி கதைக்க வேண்டாம் என்றாள் என்ன செய்வாய். ?

 இப்ப பாட்டி ஊரில் தானே !
.அடுத்த கோயில் திருவிழாவுக்கு போகும் போது பாட்டியிடம் அழுது புரண்டாள் என் பாட்டி மசிந்து போவா.

சின்னத்தாத்தா...

 "பேர்த்திமார்களிடம் பாசம் இல்லை என்றாள் ஏன் அனோமாவை சின்னப்பாட்டியோட விட்டுட்டுப் போகச் சொன்னவா ?

நீங்க தானே பாட்டியின் சார்பில் தங்கமணி மாமாவின் சின்னவளையும் கேட்டதை.

 நான்ஒழிஞ்சு நின்று பார்த்தனான் தாத்தா

." நீ சரியான காரியகாரன் தான் .

நான் பேரம்பலத்தாரின் பேரன் தாத்தா !
 ம்ம்ம் 
நீ பேரன் இல்லை.

 ரூபனும் அவன் தம்பிகளும் தான் .

 "நீ சந்திரன் தாத்தா.வழிப் பேரன்."
 நான் அப்படிச் சொல்ல மாட்டன். 

ஐயா வழித் தாத்தா என்னோட பாசமே இல்லை 

. நான் அம்மா வழிதான் சொல்லுவன்.என்ற போதே பொல்காவெல ரயில் மாறும் இடம் வந்துவிட்டது என்று சின்னத்தாத்தா சொன்னதும். நாம் யாழ்தேவியில் இருந்து உடரட்டையில் மாறி எறினோம். அதிகாலையில் பதுளை வந்தோம்

. அப்போது கேட்ட பாடல் இது.(

////இனி பதுளையில் இருந்து பேசுவான் ராகுல்.


///////////மசிய -இறங்கி வாரது-யாழ் வட்டார மொழி
பப்படம் -இது தோசை போல்வட்ட வடிவில் இருக்கும் ஒரு இனிப்பு .

19 April 2012

கவிதை தந்த விருது

கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு சின்ன வயதில் இருந்து வந்த ஒன்று.
 என் கிறுக்கல்களை கவிதை என்று ஏற்றுக்கொண்டு காற்றலையில் தவளவிட்டு எனக்கு முகவரி கொடுத்தது இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபணம்.

அதில் பல நிகழ்ச்சிகளுக்கு என் கவிதை வந்திருக்கு அறிவிப்பாளர்களின் குரல்கள் ஊடாக.அதில் இதயசங்கமம் என்ற நிகழ்ச்சியில் என் முதல் கிறுக்கல் 15 வயதில் வந்த போது என்னை நம்ம மறுத்தவர்கள் என்னை இனி கவிதை எழுக்கூடாது .என்று தடுத்தார்கள்.

அதில் தந்தையும் தாயும் இல்லை நான் சின்ன வயதில் இருந்து வாழ்ந்தது வேறு ஓர் உறவோடு யுத்தம் காரணமாக.

என்றாலும் யார் தடுத்தும் நான் தொடர்ந்தும் எழுதியிருந்தேன்.

என் நாட்குறிப்பில் அதிகம் கிறுக்கியது கவிதை தான். என் நாட்குறிப்பு நம்பிக்கையான நண்பர் வீட்டில் பத்திரமாக இருந்தது பின் சில காலம். .

தடுத்தவர்கள் மீதும் குற்றம் இல்லை .வளரிளம் பருவத்தில் காதல் பாதையில் எங்கே தொலைந்து விடுவேனோ! என்ற ஐயம் இருக்கலாம் .
ஆனால் நான் போட்ட வட்டத்தில் இருந்து பிரெஞ்சு வரும் வரை வழிமாறியது இல்லை

.வியாபாரம் காரணமாக யாழ்தேவியிலும் உடரட்டையிலும் என் வாழ்க்கைப்பாதையில் ரயில் பயணங்கள் அதிகம் செய்தேன்.

போகும் ரயியிலில் இறுக்கமாக இருந்தேன். கவிதை எழுதுவதும் இல்லை. கரைந்து, கலைந்து ,கலந்து போகவும் கூடாது என்று.!

பாரிஸ் தேசத்திலும் ரயில் பயணங்கள் தொழில் நிமித்தம்.
 என்னோடு சிலர் வந்தார்கள் கேட்டார்கள் கவிதை எழுதுவியா ?என்று .
ஓம் என்று ஒருத்திக்கு எழுதிக் கொடுத்தேன்.!
 வாசிக்காமல் போய் விட்டாள்.


அது வாசிக்கப் படாமல் போனாலும் கவிதை விருது தந்திருக்கு.பாதை!



விரிந்த தெருக்களில் ஊடே வந்து
விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்ல
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது
இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து
நிற்கின்றது இரு மரம்
அதில் ஒரு தனிமரம்
வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில்
சிறுமரம் உன்னைப்போல
வட்டத்துடன்
இரு பக்கமும் விம்மியழுகின்ற
வட்டக்கல்லாக யாரோ
நான் சொல்லமாட்டேன்
வாழ்க்கைபாதையில்
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!





 .மகிழ்ச்சியுடன் என் வலையில் வைத்துக் கொண்டேன் ..

நன்றி புதுவருடத்தில் கவிதை தந்த விருது பாராட்டிய  ஹேமா உப்புமடச் சந்தியில் !


. வீடு இல்லாதவன் ஏதிலி ! வலையில் வைத்திருக்கின்றேன் பெரியோர்களே தப்பாக எண்ணாதீங்கோ !

நான் பதிவுகள் எழுதுவதும் இந்த ரயில் பயணப்பாதையில் தான். போக்குவரத்தில் அதிக நேரம் இந்த தேசத்தில்.!


பாசம்.- இந்த குடும்பம் ,உறவு ,நண்பர்கள் என்ற பாசத்தில் நானும் தொலைந்தவன் .அதைக்கடந்து போகணும் என்று தான் ஆன்மீகத்தில் அலைபோல அலைகின்றேன் ஆனாலும் விடாது சில உறவுகள் .



எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில்
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக
குண்டு வைத்திருக்கின்றான்
பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார்
இருட்டறையில் இப்படித்தான் சொல்லி
சோறு ஊட்டுகின்றேன்
பாவி மகள் நான் பாசமாக
என் பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி
வரும் தந்தை நிலா என்று.


-வேலைத்தளத்தில் அவசரத்தில் ஆர்வத்தில் எழுதிய பின் முடித்துவிடு தங்கையே என்று போய் விட்டேன் மீண்டும் வந்த போது மிக அற்புதமாக புனைந்து இருந்த என் தங்கை கலை கருவாச்சியோடு  சேர்ந்து எழுதியது இந்தக்கிறுக்கல் ! 

நேசன் & கலை(கருவாச்சி)...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்
தோள்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில்
தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம்
காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

தொலைந்த மொழிகளும்
மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாய் திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே
ஒரே மரம்
தனிமரம் என்னவளுக்காய் !!!


அந்த கலைக்கு இன்னொரு அண்ணாவின் சிறப்பு .நன்றி!

18 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-32

யார் சதிசெய்பவன்!
யார் எம் கனவினுள் மலத்தை எறிபவன்!
                                                     வா.ஜ ச..ஜெயபாலன்!!

முக்கிய போராளிகளின் வாகனம் பல பாலம் தாண்டிப் பின் நகர்ந்து சென்ற வேளையில்!
 பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த.

 அதில் போனவர்களில் சோதி மாமாவும் ஒருவர் !அவரின் பெயர் மாற்றம் கண்டு இருந்தது அந்த இயக்கத்தின் சட்டத்திற்கு அமைவாக.

 அப்போது பார்த்த மாமாவைப் பின்னால் பார்க்கணும் என்ற ஆசையே இருந்தது இல்லை ராகுலுக்கு.

 உறவுகள் விட்டுப்போனவரை ஏன் தொந்தரவு ?

.வழிகள் எங்கும் உறவுகள். யார்வீட்டில் தங்குவது? இனி என்ன செய்வது? என கையறு நிலையில் பலர் வீதியில் இருந்த நிழற்குடையின் கீழ் இருந்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதற்க்கு இடையில் எத்தனை சிறுகிராமங்கள் இருக்கு .

என நடந்தும் ஓடியும் தெரிந்துகொண்டோம்.!

மூளாயில் இருந்து சுழிபுரம் வந்து சில நாட்கள் குடியிருந்தோம்.
ஒரு முகம் தெரியாதவர்கள் முன்பக்கத்தில் வாடகைக்கு இருங்கோ என்றதில் .

"எங்க போனாலும் மூலதனம் கல்வி என்பது யாழ்பாணத்தவனின் முதுசகம் என்பார் எஸ்.பொ "

அதையும் அகதியான போது சுழிபுரத்தில் பிரபல்யமான பாடசாலையில் பின்னேரம் படித்தான் ராகுல் .

அப்போது என்ன படித்தோம் என்று ஞாபகம் இல்லை !

பள்ளிவகுப்பில்  இருந்தது நான்கு பேர் ராகுலுடன்.

 அதில் மேனகா மற்றவள் மீனா அடுத்தவள் சாந்தி .இவர்கள் எல்லாம் உறவுக்காரிகள் என்பதால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள் பள்ளிக்கு .

அந்தப்பள்ளியில் நானும் படித்தேன் என்பதே கெளரவம் ஆகும் என நினைக்கையில் !

மறுபுறத்தால் மாதகளில் இருந்து வந்த ஷெல் அடியால் எல்லோரும் இன்னும் ஒரு பக்கம் முன்னேறினோம் .

வடக்கொம்பரை தாண்டி சங்கானை, சித்தங்கேணி ,மானிப்பாய் என பரதேசியாக திரிந்தோம் .

இண்டையில் இரண்டுநாள் மெய்கண்டானில் பின்னேரம் படிக்கும் போது பார்த்த சாந்தி பின்னாளில் போராளியாகி விட்டாள் என்று செவி வழியாக செய்தி வந்தது .

அப்போதும் ராகுல்  அருகில் இருந்து படித்தாள் மேனகா!
" எப்படா எங்கட ஊருக்குப் போவம் ராகுல்"

" எனக்கு என்ன தெரியும் சின்னத்தாத்தா விரைவில் போவம் என்று சொல்லுகின்றார் "

எனக்கும் பாட்டியில்லாமல் இந்தக்கிழமை வீட்டில் கோப்பி கிடைக்கவில்லை!

 ஊத்தைத் தேயிலையில் விட்டா மில்க் கலந்து தந்த அம்மாவோடு இன்று  காலையில் எனக்கு  சீனியுடன் கோப்பி வேண்டும்.

 என்ற போது.

 சங்கக்கடையில் இன்னும் சீனி வரவில்லை என்று சொன்னதையே சொன்னா!

எனக்கும் ஊருக்கு போய் விட்டால் பழையபடி விளையாடலாம்! கணக்கு வாத்தியார் கருக்கு மட்டையால் அடிக்க மாட்டார் 13 வாய்ப்பாடு இப்ப எனக்குப் பாடம் என்று சொன்ன போதே அடுத்த ஷெல் வந்த திசைப்பக்கம் கேட்டது .

ஹெலியின் சத்தம் ஒடுங்கோ பங்கருக்குள் என்று ஓடி ஒளிந்தோம் .

அதன்பின் பள்ளிக்கூடம் யாழில் போகவில்லை!

 கோட்டை மீதான போராளிகளின் தாக்குதல்கள் வெற்றியை நோக்கிப் போகும் தருணத்தில் .

இராணுவம் பல இடங்களில் தரைவழியாக முன்நகர்ந்தது வந்தது அதில்  மாதகல் மற்றும் தீவின் மறுகரைகளில் இருந்து ஆவேசமாக முன்னேறியது.

ஒரே யுத்த மழைl

இனி இங்கிருக்க(யாழ்ப்பாணத்தில்) முடியாது! என்று வன்னிக்குப் போனோம் குடும்பங்கள்  சூழ சேர்ந்து கூட்டமாக.

 பல அயல் வீடுகள் எல்லாம் கூடவந்தார்கள்!

 இடையில் யாழ்ப்பாணத்தார் எங்களுக்கு இருக்க வீடு தராமல் நெஞ்சில் சூடு வைத்தார்கள் .வார்த்தையால் !!

"தீவாருக்கு திண்ணையில் கூட இடம் தரமாட்டோம் "

என்று சொன்ன பாட்டிக்குத் தெரியவில்லை சின்னப்பிள்ளைக்கள் முன் பெரியவர்கள் எப்படிப்பேசணும் என்ற சபை மரபு.

 எந்தப்பாட்டி எகத்தாளமாக பேசினாவோ !அந்த வீட்டையே பின்னாலில் தீவானுக்கு வித்துப் போட்டு. கடல் தாண்டி அகதியாகி விட்டா என்ற போது அனுதாபம் தான் வந்தது.

.
வன்னி போகும் போதும் ரூபன் மச்சான் சண்முகம் மாமியுடன் கைபிடித்து வந்தான்.

 சின்னத்தாத்தாவிடம் முத்தாச்சிப்பாட்டி தன் மச்சாள் என்று உறவு கொண்டாடிய பாட்டி வீடு வட்டக்கச்சியில் ஒன்று இருந்தது.

 அந்த வீட்டில் இடம் கிடைத்தது எல்லோருக்கும்.

 .அங்கேயும் ஒரு பாடசாலையில் அதிகாலையில் படித்தான் ராகுல்.அது சில்வா ரோட் என்று இருந்தது பின் மணிவண்ணன் வீதி என்று மாற்றிவிட்டது பின் நாட்களில்!

பின் ஐயா கடை திறந்து கிளிநொச்சியில் .
அங்கே இரு  பாட்சாலையில் படித்தான் ராகுல்..(இதில் ஒன்றில் பதிவுலக நண்பர்கள் தம்பி ராச் முதல் காதல் தொடங்கியது)


.அப்போதும் மேனகா கூட இருந்தாள் !

இரணைமடுக்குளம் ,கனகாம்பிகைக்குளம் என பார்த்ததும் வாய்க்காலில் குளிர்த காலங்கள் இனி யுத்தம் வராது என்ற நம்பிக்கை தந்தது.

 ஏன்னா ?இங்கு ஆமிக்காம் அருகில் இல்லை

.சின்னத்தத்தா அன்று ஐயாவிடம் வந்தார்!

 இப்போதுதான் நாங்கள் வேற இடத்தில் முதல் முறையாக  முத்தாச்சிப்பாட்டி,சண்முகம் மாமி,புனிதா மாமி,என எல்லாரையும் விட்டுட்டு இங்கு வந்திருந்தோம் !

..சின்னத்தாத்தா தன்னுடன் இரண்டு அண்ணாமார்களையும் கூட்டி  வந்திருந்தார் .அவர்களும் எங்களோடு கேரதீவு சங்குப்பிட்டியால் தாண்டிவந்தவர்கள்.!!

தொடரும்///


சங்கக்கடை-ரேசன்கடை.
விட்டாமில்க்-ஒரு பால்மா பாக்கட் விற்பனை மார்க்கு!
பங்கர்-பதுங்குகுழி

17 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-31

இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள் என்
 கனவுகள் பலித்திடும்.திருநாள்!
-மாவை வரோதயன் பாடல்!

அன்று பாலம் கடக்கும் போது பலரும் தலையில் சுமந்து சென்றது பொருட்களை மட்டும் மல்ல ஊர் மீதான கடைசி நேர உணர்வுகளையும் தான்.

குடுகுடு பாட்டியும் குமரி சுசந்திக்கா ஜெயசிங்க போல பாலம் தாண்டி ஓடினவேகத்தைப் பார்த்த போது தெரிந்தது! மரணபயமும் யுத்த மோதலில் எப்படியும் தப்பித்து விடவேணும் நேவிக்காரனிடம் இருந்து என்ற கருத்துமே.

பொழுது விடியவிடிய பலரின் அழுகுரல்கள். பாதி நித்திரை இல்லாத அதிகாலையில் பாலத்த்தின் நீளம் 3 கிலோ மீற்றர் எப்படித் நடந்தே கடந்தார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல இருக்கும்!

.பாலம் கடக்கும் போது பங்கஜம் பாட்டியையும் சின்னப்பாட்டியையும் தனிய விட்டுட்டு வாரதில் விருப்பம் இன்றி இருந்தோம்.
  சின்னத்தாத்தாவிடம்  .
"பங்கஜம் பாட்டி என்ற பேரன் ,பேர்த்திக்கு உதவியா இருப்பா உனக்கு கோடி புண்ணியம்கிடைக்கும் என்று கை எடுத்து அழுததைப்பார்க்க முடியாமல் "

எப்போதும் மச்சாள் பேச்சை மீறாத சின்னத்தாத்தா மெளனமாக நின்ற கனங்கள்.

 தன் கணவனுடன் உடன் போகும்  சின்னப்பாட்டியும் சகலி  பங்கஜம் வராமல்  நானும் பாலம் தாண்ட மாட்டன் என்று சொன்ன குடும்ப ஒற்றுமை .

எங்கேயோ இருந்து  ஒரு வீட்டில் வாழ வந்தாலும் மூத்த மருமகளையும் இன்னொரு சகோதரியாக எண்ணிக்கொள்ளும் பாசம் அடுத்த தலைமுறையிடம் இல்லாமல் போன நிலையை எண்ணும் போதெல்லாம்!

" கோதாரி பிடிப்பாங்கள் சும்மா இருந்த தேன் கூட்டை நொட்டி விட்டாங்கள் கோதாரி அறுப்பாங்கள்"
 என்று திட்டிக்கொண்ட போன சைக்கிள்கடை சின்னராசு மாமாவின் பேச்சுத்தான் ஞாபகம் வரும் .

பாலம் தாண்டும் போதே எங்கோ !இருந்து வந்த வெடிச்சத்தம் கேட்ட அதிர்ச்சியில் சைக்கிளை பாலத்தில் ஓட்டாமல்  சைக்கிளோடு கடலுக்குலுடன்  விழுந்து எழும்பியதும் வந்து விடுகின்றது சேர்ந்தே நினைவுகளாக!

மறுநாள் அதிகாலை ஆதவன் ஒளி கொடுக்கமுன் ஆமிக்காரன் ஷெல் ஒளியும்/ஒலியுமாக  கொடுத்துக்கொண்டு முன்னேறியதும் !

கடைசியில் நின்றவர்கள்  மீது ஹெலிகப்படரில் இருந்து சுட்டதில் சுவையாக எள்ளுப்பாகு விற்கும் பாட்டியும் மோளும் சுட்ட இடத்திலேயே செத்துப் போனார்கள் என்ற செய்தி செவியில் விழுந்தது

.தனியாக நிற்கும் பாட்டிமார் என்ன கெதியோ?
 என்று ஏங்கிக் கொண்டு அன்று விடியும் வேளையில் அடுத்த ஊர் வந்த போது. தெரியாது இனி எங்கள் ஊரில் உறவுகள் சூழ ஒன்றாக இருந்து  ஒரு நாளும் விடியலைப்பார்க்கமாட்டோம் என்று.!

பங்கஜம் பாட்டியும் சின்னப்பாட்டியும் பேரன்களுக்கும், பேர்த்திமாருக்கும் கொடுத்த முத்தம் இனிக்கும் .

அதில் கடைசியாக ரூபன் மச்சானுக்கு கொடுக்கும் போது அழுத்திக்கொடுத்த முத்தம் .அதுதான் அவனுக்கு கடைசி முத்தம் என்று அன்று தெரியாது பாட்டிக்கு!

கழுத்தில் இருந்த சங்கிலியை போட்டுவிட்டு பேர்த்தியிடம் சொன்னா!
" பேரம்பலத்தாரின் பேரன்கள் எல்லாம் கோபக்காரங்கள். என்றாலும் குடித்தனம் யாராவது ஒரு பேரனுடன்  தான் உங்களுக்கு .என்று பல்லவிக்கும் ,சுகிக்கும் சொல்லிய போது!

 முத்தாச்சிப் பாட்டி சொன்னா "
அவனவன் ஓடுகின்ற நேரத்திலும் நீ உன்ர கடைசி ஆசையைச் சொல்லுறீயோ"?

உன்ற பேரன்கள் யாரைக் கூட்டிக் கொண்டு எதிர்காலத்தில் ஓடுறாங்களோ?

" .இந்தப் பங்கஜம்  செம்பு எடுத்து .ஒரு சொட்டுத்தண்ணீர் கொடுக்க மாட்டன்.
"கொள்ளிபந்தமும் பிடிக்கக்கூடாது என்று சொல்லித் தான் வளர்த்திருக்கிறன் என்ற பேரன்களுக்கு.

ஆத்தா நீ தான் இவங்களை பத்திரமாக பார்க்கணும் என்று அந்த நேரத்திலும் கம்பீரமாக நின்றா பங்கஜம் பாட்டி கண்களுக்குள்.

முத்தாச்சிப்பாட்டி,சண்முகம் மாமியின் பிள்ளைகள்,புனிதா மாமி,செல்வம்மாமி,சுகி ஈசன் மாமி பல்லவி யோகன் அண்ணா,தம்பி .அம்மா என எல்லோரும் பங்கஜம் பாட்டியும் சின்னப்பாட்டியும் நிற்க ஊரைவிட்டு ஓடிவந்தோம் நாங்கள் .

அது புரட்டாசிமாதம் .சனியன் வரும் மாதத்தில் சனியன் பிடித்தது எங்கள் வாழ்வில் இடம் பெயர்வு என்ற சனியன்.

அன்று போனவர்கள் ,பார்த்தவர்கள் ,கண்டவர்கள் தெரிந்தவர்கள் என பிறகு பார்க்கமுடியவில்லை பலரை ராகுல் பின் நாட்களில்.!


 என்னடா ராகுல் சத்தம் இல்லை. ஏன் பாட்டியைவிட்டு வாரதில் கவலையோ ?விரைவில் திரும்பிப் போகலாம் என்று சின்னத்தாத்தா தைரியம் சொன்னார்.அப்போது!

தொடரும்!

//கோதாரி அறுப்பாங்கள்-கஸ்ரப்படுத்தும் செயல்-யாழ் வட்டார சொல்
நொட்டி விடுதல்-குழப்பி விடுதல்-யாழ் வட்டாரவழக்கு.