09 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-21

பலரும் தியேட்டருக்குள் போவது என்றால் படம் பார்க்க என்று நினைப்பார்கள் !சிலருக்குத்தான் தெரியும் அங்கே இருக்கும் மதுபானக்கடை.

 இங்கு சிலரை பாராளமன்றத்தில் ஓட்டுப்போட சூட்கேஸ் கொடுப்பது போல நம் வியாபார பொருட்களை வாங்க மறுக்கும் நிறுவனத்தின் கணக்காளர்கள் பலர்  இங்கு இரவில்  வருவார்கள்.

அவர்கள் மதுபான தெப்பக்குளத்தில் இராமனால் பதவி பெற்று அவனுக்குக் கொடுத்த வாக்கு மறந்து  அரச அந்தப்புரத்தில் மது மயக்கத்தில் கிடந்த சுக்ரீவன் போல்!
 போதையில் இருப்பார்கள்.

 அப்போது அவர்களுடன் ஒரு கிளாஸ் சாரயத்துடன் எங்கள் பேரம்பேசும் திறமையை தொடங்கி.

     இன்னொரு கிளாஸ் குடியுங்கோ !நான் பில் கொடுக்கின்றேன். என்று தூண்டில் போட்டு எங்கள் வியாபாரத்தின் பொருட்களை மறுநாள் அவர்கள் நிறுவனத்தில் 2g  அலைவரிசை போல் கொடுத்து விடுவோம்!

 இதெல்லாம் ஒரு வியாபார உத்தி நாங்கள் இதில் ஊறிப்போன உத்தமர்கள்!

என்னிடம் சில நாட்களாக அவியாத ஒரு கணக்காளர் திலகத்தை இன்று தண்ணிகாட்டும் முடிவுடன் தான் அவரைக்கான அவர் வரும் முன்னாடியே போய் இருந்தேன்.

 இங்கு இராணுவத்தார் வருவதால் பலர் நேரகாலத்துடன் தங்கள் அளவுக்கு ஏற்ப சுருதி சேர்த்துவிட்டுப் போய் விடுவது !

என்ன நேரத்தில், எங்கே? எப்போது ?துப்பாக்கிச் சன்னங்கள் முத்தம் இடும் என்பதை அறியாமுடியாத பயத்தினால் .

இராணுவத்தினர் சிலர் தமக்கு வரும் இலவச சாரயத்தை இங்கு கொடுத்து காசு வாங்குவார்கள்.

 சில கழிவுக்கள் போக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். அவர்களிடம் வாங்கியே அவர்களுக்குக் கொடுக்கும் நிலையும் இருக்கும்.


 இப்படியான சமயத்தில் மற்ற நண்பர்களை கழற்றி விடுவது !விற்பனை ரகசியம் வெளியில்  தெரியக் கூடாது என்பதால்.

நான் காத்திருந்தது போலவே அந்த நபரும் வர அந்தி மாலை இனிய தாகத்துடன் தொடங்கியது.

 என் வேலையும் நீண்ட மூளைச் சலவையின் பின்  ஒரு போத்தல் ரைஜின் தீர்ந்து போனது

 ஜின் குடித்தால் யாரும் விரைவில் கண்டுபிடிக்க மாட்டினம். வாய் மணக்க மாட்டு என்பதால் விலை அதிகம் என்றாலும் வேலை முடியவேணுமே!

 இந்த வேலையில் இப்படியான உள்ரகசியம் எல்லாம் நிறுவாகத்திற்குத் தெரியும்.

 இப்படியான சித்து விளையாட்டைக் கண்டு பிடிக்கத்தான்.

  ஒவ்வொரு மாதமும் ஒன்று கூடல் வைக்கும் போது முதல் நாள் இரவை பார்ட்டியில் தொடங்கி வைப்பது.

 குடியே தெரியாத பால்குடிகள் எல்லாம் கொக்கா கோலாவுடன்  கலந்து இருப்பது  சாரயம் என்று   புரியாமல் கோலா என்று குடிப்பார்கள்.

 பின் நடக்கும் நாடகங்கள் பல !

மூத்தவர்கள் யார்? யார்? எல்லாம் என்ன தில்லு முல்லு செய்தார்கள் என்று ஒற்றர்களாக மேலதிகாரிக்குப் போட்டுக் கொடுப்பது,.ஒரு தொழிலாக இருக்கும்.


 சகோதரமொழி நண்பர்கள் இந்தப்பார்ட்டி எப்படா நடக்கும் என்று காத்திருப்பார்கள்!

 அன்று குடிவகைச் செலவு எல்லாம் நிறுவனத்தின் பொறுப்பாக இருப்பதாலும் அதிகமான வெப்பமான பகுதியில் வேலை செய்வதாலும், இன்நாட்களின் மூக்கு முட்டக் குடித்துவிட்டு.

 ரபான் தளம்போட்டு பாடும் போது அவர்களும் ஒரு பின்ஸிரி பீரிஸ்,ரூக்காந்த குனதிலக்க நாமல் உடுகம என பாடகர் பட்டியல் நீளும்!


 ஆலாபனைக் காட்சியைப் பதிவு செய்ய அன்நாட்களில் கைபேசியில் கமரா இல்லாதது  ஒரு குறையே!

 இங்கு நடக்கும் செயலைப் பார்த்து விற்பனைப்பிரதிநிதி வேலை வேண்டாம் என்று ஓடிய பலரையும் பார்த்தவன்!

இங்கு நடந்த பல சுவையான விடயங்களை பல பதிவு போடமுடியும் .சில  வருட சுகமான வாழ்க்கையில் எத்தனை பேர்களுடன் எத்தனை நட்சத்திர விடுதியில் பல நண்பர்களைப் பார்த்தவனுக்கு இப்படி ஒரு ரவி வந்தானே!

 என்ற ஜோசனையில் இருக்கும் போதே என்னைத் தேடிச் சைக்கிளில்l  ரவி வந்தான் அந்த தியேட்டர் மதுபானசாலைக்குள்!


தொடரும்

-//////
ரபான் -சிங்கள இசையில் பிரதான தோல் வாத்தியம்.




08 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-20

வியாபாரம் என்றாள் பலதையும் பார்க்கனும் தானே என்ன தீடீர் என்று வழமையாக ரவியுடன் தானே வருவாய் நான் உங்களிடம் தான் ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிக்க வந்தனான் ஏப்பா புதுசா ஏதாவது தொடர் வந்திருக்கோ சரசவியவில் அம்மா இது பேப்பர் இல்ல வாழ்க்கை என்ன சொல்லுகின்றாய் யாரைப்பற்றி! நம்ம ரவி யாரையோ இஸ்லாமியப் பெண்னை விரும்புரானாம் இப்ப படிக்கனும் இந்த நேரத்தில் அவங்க பக்கத்தில் இது தெரிந்தாள் பட்டானிச்சூர்ப் பக்கம் பட்டம் விடுவாங்க இவன் படத்தை வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்கின்றான் இல்ல நீங்க தான் திருத்தனும் ஒரே மகன் என்று வந்த விடயத்தை குசுமாவதி அம்மாவிடம் சொன்னேன்!

என்ர மகன் ஒரு நாளும் அப்படிச் செய்யமாட்டான்.

 படிக்கத்தான் நான் அனுப்பினான்.
 இப்படி உங்களைப்போல கண்டவர்கள் கூடச் சேர்ந்து தான் கெட்டுப்போறான்.

என்னம்மா!" என்னையும் பிரிச்சுப் பேசுறீங்க .

என்ர மகனைப்பற்றி இப்படித் தப்பாக கதைக்கும் போது சும்மா இருக்கமுடியுமா?

 அவன் தங்கமான குழந்தை.
 இந்த வயசில் யாரோ மருந்தோ மாயமோ செய்து மயக்கியிருப்பினம் என்ர புள்ளையை அப்பவே அயலில் இருப்போர் சொல்லிச்சினம் உங்களைப் போன்ற சந்தைப்படுத்தலில் இருப்போரிடம் இவனைப் பழகவிடவேண்டாம் என்று .

செக்குக்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று.

 நானும் நண்பன் என்று பழகவிட்டன் இப்போது உங்க ஊர் புத்தியை காட்டுகின்றாய் .

இனி இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இந்த வீட்டை வரவேண்டாம்

.உன்னையும் மகனாக நினைச்சுத்தான் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்தது .

கடைசியில் நீயும் ஒரு பச்சோந்தி என்று காட்டிப்போட்டாய்

.இங்கு இருந்து போயிடு என் முகத்தில் இனிமேல் முழிக்கக் கூடாது கேட் திறந்து இருக்கு .

அம்மா ஒரு நிமிடம் ஜோசித்துப் பாருங்க ?ரவிக்கு நல்லது செய்யனும் என்று தான் நான் இதைச் சென்னது.

 உங்களுக்கு இப்படிக் கோபம் வருவது அவன் மீதான பாசம்.

 ஆனாலும் உண்மையைச் சொல்லாவிட்டால் பின்னாடி என்னிடம் நீங்கள் எதுவும் கேட்கலாம் ஒரு வார்த்தை முன்னால் சொல்லியிருந்தால் என் பிள்ளையை நல்ல வழிப்படுத்தியிருக்கலாம் என்று. அவ்வளவுந்தான்.

 மதியாதார் வீடு மிதியாமை ஒரு கோடி பெறும் என்று ஒளவையார் வாக்கு.

  அன்பாக வரவேற்கின்றோம் என்பது சகோதரமொழி.

 எங்கு  மனம் அமைதி இல்லையோ? அங்கே வார்த்தைகள் முண்டியடிக்கும் மூர்க்கமாக.

 நான் இனி உங்க வீட்டை வரமாட்டன் என்று விட்டு அங்கிருந்து வெளியேறினேன்!

என் சிந்தனையில் குசுமாவதி அம்மா ஏன் இப்படி புரிஞ்சுக்கவில்லை!

 மகன் மீது இப்படி ஒரு பாசமா?மூடத்தனமான நம்பிக்கை ஏன் ?

கண்டிக்கச் சொல்லலாம் என்றாள் என்னை அல்லவா தண்டிக்கின்றா!

 நல்லதே நடக்கட்டும் என் வியாபார விடயமாக ஒருத்தரை இந்திரா தியேட்டரில் பார்க்க வருவதாக சொல்லியிருந்தேன் .

மாலையில் வேலைத்தளத்தில் இருந்த இறுக்கமான மனநிலையில் கம்பளைக்கு உடனடியாகப் போகமுடியாது என்று சுகயீன லீவு( மெடிக்கல்) தொலைநகல் மூலம் அனுப்பி விட்டு கொஞ்சம் பகல் தூக்கம் போட்டேன்.

 உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு!

மனதுக்குள் ஒரே சஞ்சலம் இவர்கள் காதலில் என் வியாபாரமும் பாதிக்கப்படுகின்றது.

 ஒழங்கா வேலையில் கவனம் செலுத்தலாம் என்றாள் குசுமாவதி அம்மா இப்படி பேசிப்போட்டா.

 எது எப்படியோ ஒருத்தி போய் விட்டால் பிரச்சனை குறைவு .

வாப்பா இன்னும் அழைப்பு எடுக்கவில்லையே இந்த நேரத்திற்கு அவர்கள் ரந்தனிக்கல ஊடாக பதுளை போய் இருக்கனுமே?

 பகவானே நல்லதே நடக்கனும் என்ற எண்ணங்கள் ஊடே இந்திரா தியேட்டருக்குள்  பொன் அந்திப் பொழுதில் உள்ளே சென்றேன்!

தொடரும்
///////:
சரசவிய-சிங்கள வாரச்சஞ்சிகை.

பட்டானிச் சூர் -வவுனியாவில் ஒரு மக்கள் குடியிருப்பு