19 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-44


முதுகு வலியைவிட
இதயம் முகாரி பாடியது
முடிவு இல்லாத உன் காதலினால்
முன்னம் முத்தம் தந்தவளே
பின்னம் பித்தனாக்கினாய்!
( ஜீவனின் நாட்குறிப்பில்)


பிரெஞ்சு தேசத்தின் இயல் இசை நடனத்தின் தாற்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் தேடலின் வெளிப்பாடாக ஸ்டார் அக்கடமிக் (star accadamic) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது பிரெஞ்சு தேசத்தில் தொலைக்காட்சி நேயர்களும் கலை ஆர்வலர்களும் இசை நாட்டம் இருக்கும் இளைஞர் யுவதிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதில் நாடு தழுவிய ரீதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பலரை கூத்துப்பட்டறை போல ஒருங்கமைத்து மூத்த பல கலைஞர்களின் வழிகாட்டலில் இளைய சமுதாயத்தை போட்டியிட வைப்பதோடு ஆலோசனையும் ஆதரவும் கொடுப்பதால் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ரசிப்பார்கள். செப்டம்பர் இறுதி வாரத்தில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி கிறிஸ்து பாலன் பிறப்பினை வரவேற்கும் டிசம்பர் மாதம் 24 முன் வரும் வெள்ளியில் முடித்து கிரீடமும் பொற்கிளியும் வழங்கி நாத்தரை சிறப்பாக்கும் ஒரு போட்டி நிகழ்ச்சி. அடுத்த நட்சத்திரம் என்ற முகவரி கொடுத்து பல மேடைக் கச்சேரியும் இசை இறுவெட்டும் வெளிவர ஊக்கம் கொடுக்கும் ஒரு தேடல் நிகழ்ச்சி என்பதால் பாரிஸ் வந்த காலத்தில் இருந்து மொழி புரியாவிட்டாலும் ஜீவன் இந்த நிகழ்ச்சயை ரசித்துப் பார்ப்பான்.


நிசாவுக்கும் அதிகம் பிடிக்கும், யார் நல்ல திறமைசாலி என்று அவளோடு பந்தயம் கட்டுவதும் வாக்கினைப்பதிவு செய்வதும் என ஒரு போட்டித் தன்மை சில மாதங்களாக இருவருக்கும் டையில் இருக்கும். அதனால் இந்த வாரம் ஆஸ்பத்திரியில் வீற்று இருக்கும் வெட்டிப்பயல் என்ற நிலையில், நிசா! இந்த வாரம் யார் வெளியேறியது ? என்று பேச்சியைத் தொடர்ந்த போது, நேற்று நான் பார்க்கவில்லை ஜீவன், மனசில் தெளிவு இல்லை முரண்பாட்டின் மூட்டையாக நான் இப்போது இருக்கறேன் என நிசா கூறி முடித்தாள்.

ஏன் நிசா என்னாச்சு ? இல்ல ஜீவன் இன்னும் 5 வருசம் தொடர்ந்து படிக்க வேண்டும். அதன் பின்தான் நல்ல வேலை எடுக்க முடியும். கணக்கியலில் மேல படிக்க லண்டன் போறன்! 

அப்பாவும் அம்மாவும் இதைத்தான் விரும்புகின்றார்கள். அப்பா இந்த குளிர் நாட்டில் வந்து எவ்வளவு கஸ்ரப்படுகின்றார். எனக்காகவும் என் தங்கைகளுக்காகவும் என்று உனக்கு எப்படிப் புரியும்? சில வருடம்தானே வந்து இந்த நாட்டில் இன்னும் உனக்கு ஒரு முகவரி இல்லை. என் வழியில் படிப்பு என்று போனவளையும் ஏன் காதல் என்று கல் எறிந்தாய்? எனக்குள்ளும் போராட்டம் 21 வயதில் இப்படி ஒரு பரவசம் உன்னால் தான்டா!
உன்னைப் பார்த்த நாளில் இருந்து நானும் உன்னோடு அதிகம் நட்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ காதல் என்று சொல்லிவிட்டுப்போன அன்றைய ரயில் பயணம் எனக்கு முட்காடுப் பயணத்தில் நின்றது போல ஒரு உணர்வைத் தந்தது.!


 ஆனால் அது எல்லாத்தனையும் இந்த விபத்து இன்னும் சிக்கல் கொடுத்துவிட்டது என்று உனக்குத் தெரியுமா? நீ முதுகில் அடிபட்டதும் அதற்க்காக சத்திரசிகிச்சை செய்ததும் வீட்டில் இன்னொரு புயல்கொடுத்ததை எப்படிச் சொல்வேன். ஜீவன் ரவி அண்ணா வந்த போது அப்பா இன்னும் கோபம் ஆகிவிட்டார். அன்று முதுகெலும்பு இல்லாத ஆம்பிள்ளை! அவன் எப்படி என்ற மோளை சந்தோஸமாக? வைத்திருப்பான் என்று அவர் ரவி அண்ணாவுடன் நாகரிகம் இல்லாமல் பேசியதைக் கேட்டு என்னால் அழத்தான் முடிந்த்து.
வேற என்ன செய்ய வீட்டைவிட்டு வாருவதோ அரச உதவி அமைப்புகளில் போய் கையேந்துவதோ எனக்கு விருப்பம் இல்லை! முதலில் உனக்கு ஒரு முகவரி கிடைக்கட்டும். இந்த நாட்டில் அதுவரை 3 வருடம் காத்திரு, பாரிஸிற்கு இடையிடையே வருவேன். அப்போது முடிந்தால் ரயிலில் சந்திப்போம். பிடிச்சிருக்கா பிடிக்கலயா என்று இப்ப என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது.


ஜீவன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது, என்பாயே அப்பா அம்மாவின் சந்தோஸம்தான் எனக்கு எப்போதும் முக்கியம். உனக்கும் அது புரியும் தானே. பங்கஜம் பாட்டியை நான் அதிகம் பிரிந்திருந்துவிட்டேன். யுத்தத்தினால் அந்தப்பாட்டி பாசத்தில் ஒரு சீமாட்டிதான். அவா இங்கு இருந்தால் தன் பேரனை இப்படி அவமரியாதை செய்வதை நினைத்து நிச்சயம் அப்பாவுடன் முரண்பட்டு இருப்பா. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு, உங்க அப்பா காசு தந்ததும் பாட்டி தடுத்ததும் மறக்கவில்லை. இதை எல்லாம் அப்பாவிடம் பாட்டி சுட்டிக்காட்டுவா.
அதனால் இன்னும் குடும்பம் பிரிந்திருக்க வேண்டிய நிலை வந்துவிடும். என்ன செய்ய ஜீவன்! 


நிசா உன்படிப்பு முக்கியம் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தே இந்த படிப்புத்தான்! 3 வருடம் இங்கு சாதாரணம் விடிந்தால் பொழுதுபோய் இராக்கோழி போலத்தான் வீட்டை வருவது அப்படியான சமைத்தள வேலை இது. எல்லாம் யார் அறிவார்? நீ சந்தோஷமாக லண்டன் போ இன்னும் தெளிவாக ஜோசித்து 3 வருடம் கழித்து வந்து பார் நிச்சயம் நான் வணங்கும் கடவுளும் என் நண்பர்களும் கைவிடமாட்டார்கள். நீ போய் வா சோதி மாமா காத்து இருப்பார் கார்டிநோவில்!

தொடரும்!

4 comments :

வெற்றிவேல் said...

உருகும் பிரஞ்சுக்க்காதலி---- அருமை சகோ...

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவிற்கேற்ற பாடல்...

தொடர்கிறேன்...
tm2

K.s.s.Rajh said...

////உன்னைப் பார்த்த நாளில் இருந்து நானும் உன்னோடு அதிகம் நட்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ காதல் என்று சொல்லிவிட்டுப்போன அன்றைய ரயில் பயணம் எனக்கு முட்காடுப் பயணத்தில் நின்றது போல ஒரு உணர்வைத் தந்தது.!////அதுதானே பார்த்தேன் வழிக்கு வந்துதானே ஆகனும்

தொடருங்கள் பாஸ்

முத்தரசு said...

தொடருங்கள்.....தொடர்கிறேன்