21 May 2011

அவலத்தை சொல்லவா?!

பெற்ற தாயைப் பிரிந்து தவழ்ந்த வீடு இழந்து வளர்ந்த கிராமத்தைப் பிரிந்து!
பாசமான  அயலை இழந்து வளர்த்த உறவுகளைப் பிரிந்து!

கூடவந்த பாசப்பிறப்புக்களை தவிர்த்து!
கற்ற கல்விக்கூடங்களை மறந்து!
கால ஓட்டத்தில் துயரங்கள் சுமந்து இடம் பெயர்ந்து வாழ்ந்த  இடங்களின் ஞாபகங்களைப் பிரிந்து !

பணிபுரிந்த பால்யகால நண்பர்கள் முகம் மறந்து பலதூரம் வந்து படும் ஈழ ஏதிலிகள் அவதிகள் ஆயிரம்! 

தொலைபேசிகள் ஊடே ஆரவாரமற்ற விசாரிப்புக்கள் அடுத்தவர் முகம் தெரியாமல்!

அதிகாலை சூரியனைக்கானாத பொழுதுகள்
அடுத்த வேலை அவசரத்தில் அமைதியில்லா ஆத்தாவிற்கு இரண்டு நிமிட அலைபேசியில் அன்பைத் தந்துவிட்டு!
அந்திவரும் நேரம் தெரியாமல்  கோழித்தூக்கம் போட்டுவிட்டு!
 
தொட்டுவிடலாம் என்ற தொலைதூர சிகரங்களை நெஞ்சில் தாங்கி!
தொலைந்து போன அமைதிகள் அடுக்கலாம் ஒரு பாரதம்!

மாலை மயக்கம் தெரியாமல் மல்லுக்கட்டும்
பின்னிரவு வேலையில் கொதிக்கிறது ஆட்டுக்கறி அலைபாயும் மனம்போல்!

சாமப் பேயாய் வீடுவந்தால் காத்திருந்து பிடிக்கும் கடன்காரன் போல் தொலைபேசி அழைப்பு !அவசரத்தில் எடுத்தாள் என்னையும் எடுத்துவிடு அண்ணா அங்கே என்று ஒரு உறவு!
 அவளைப் படிப்பித்துவிடு என்று அடுத்தமுனையில் அத்தையின் அவலம்! அம்மாவிடம் கொடுங்கள் என்றாள்
சரியப்பு என்றே கைமாறும் போது கழுவுகிறேன் முகத்தை கண்ணயரக்கூடாது என்று! 
 காத்தால மூத்தவள் வந்தாள் முன்னம் நீ சொன்ன சீதனம் கேட்டு என்றாள் முன்சுமந்து பெற்றவள்!
..
மூச்சு முட்டுகிறது கொதிக்கவைத்த கோப்பித்  தண்ணி! என்னைப் பார்த்து!
மாதக்கடைசி கட்ட வேண்டிய வங்கிகடன் கடிதத்தை நீட்டுகிறான் இடையிலே நித்திரையில் எழும்பிய நண்பன்!

இத்தனையும் பேசும் போதும் என்ன மச்சான் ஒரு வீடு வாங்கு யாழ்லில் ஒரு சொத்தாகும் என்று சாடைபேசும் சின்ன மச்சானுக்கு சொல்லத்துடிக்குது !
நானும் ஒரு என்ஜினியர் என்றால் ஒருகோடி கேட்பேன்  உங்களைப் போல் என்று நாக்கூசாமல்!
 எல்லாம் பேசியும் என்னவள் கைமாறும் போது தொலைபேசி அட்டையும் முடியப் போகுது எனக்கூறும் பிரென்சு மொழிக்காரிக்குப் புரியுமா  பிரிந்து வந்த புதுமனைவியிடம் பேசுவதற்கு பலகதைகள் உண்டு என்று!

எல்லாம் முடிந்து இன்ரநெட்டில் நுழைந்தாள் ஒருத்தரிடமும் கிடைக்கவில்லை ஓட்டைவடை! கடுப்பில் கட்டிலில் சாய்ந்தாள் அடுத்த அறையில் அலாரம் அடிக்குது போத்திக்கின்னு படுத்துக்கவா!!

2 comments :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் நேசன்! இன்றுதான் உங்கள் ப்ளாக் வருகிறேன்! வெளிநாட்டில் நாம் படும் அவஸ்தைகள் பற்றிய இன்றைய பதிவு , மனதை கனக்கச்செய்கிறது! அத்தனையும் உண்மை!!



அத்துடன் உங்களது ப்ளாக் ல சில பல மாற்றங்கள் செய்யவேண்டி இருக்கிறது! நீங்கள் முன்பு என்னிடம் உதவி கேட்டிருந்தீர்கள்! எனக்கோ நேரப்பிரச்சனை! நேர்ல சந்திக்கிறது கொஞ்சம் கஷ்டம்! குறை நினைக்க வேண்டாம்! நான்ஒன் லைன்ல இருக்கிற அதே நேரத்தில நீங்களும் வந்தால், நான் ஒரு அரை மணி நேரத்தில எல்லாம் செய்து தருவேன்! நான் உங்களுக்கு பிறகு மெயில் போடுகிறேன்!



நன்றி! உங்கள் வலையுலக பயணம் வெற்றியாக தொடர வாழ்த்துக்கள்!!

ஹேமா said...

வெளிநாட்டில் எங்கள் அவலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் நேசன்.நேசன் இப்போ கிட்டடியிலதான் வந்திருக்கிறீங்களோ...போகப்போக மரத்துவிடும் மனம் !